×
 
☰

நேபாளத்தில் மீண்டும் பேராபத்து! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்! கரையோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

நீர்மட்டம் உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கோர்கா: அண்டை நாடான நேபாளத்தில் உள்ள புதி கண்டகி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் கரையோரப் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் நீர்மட்டம் எதிர்பாராத வகையில் உயர்ந்ததால், ஜகத் பகுதியில் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் பாயும் புதி கண்டகி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் திடீரென நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஜகத் பகுதியில் ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருந்த 5 முதல் 7 வீடுகள் முழுமையாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆற்றின் கீழ்ப்பகுதியில் உள்ள சில வீடுகளும் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, இடி முழக்கம் போன்ற பயங்கரமான சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அதிகாலையில் திடீரென நீர் பெருக்கெடுத்து ஓடியதால், கரையோரத்தில் வசிப்போர் அச்சமடைந்தனர். தொடர்ந்து நீர்மட்டம் உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: நேபாள வெள்ளம்: 85 தமிழர்கள் எங்கே? டிஎன்ஏ மாதிரிகள் அனுப்பியும் பதில் கிடைக்காத பரிதாபம்!

இதுவரை இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், வீடுகள் சேதமடைந்துள்ளதால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலை குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

கோர்கா மாவட்டத்தின் முதன்மை அதிகாரி தர்மேந்திர குமார் மிஸ்ரா கூறுகையில், சியுரிபாஸ் பகுதிக்கு மேலே ஏற்பட்ட நிலச்சரிவே இந்தத் திடீர் வெள்ளப்பெருக்குக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார். நிலச்சரிவால் ஆற்றின் ஓட்டம் தடைபட்டு, பின்னர் திடீரென நீர் வெளியேறியதா என்பது உள்ளிட்ட விவரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆற்றுப் பகுதிகளில் வசிப்போர் நீர்மட்ட உயர்வையும் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களையும் தொடர்ந்து கவனிக்க வேண்டும். பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் ஆற்றங்கரையை அணுகாமல், அதிகாரிகள் அறிவிக்கும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதையும் படிங்க: நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share