×
 

நேபாளத்தில் மீண்டும் பதற்றம்! ஆறுகள் கரைபுரளும் அபாயம்! 30 மாவட்ட மக்களுக்கு பறந்தது எச்சரிக்கை!

நுவாகோட் மற்றும் ரசுவா மாவட்டங்களில் சிறிய ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்மாண்டு: நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் பாதிப்பு முழுமையாக நீங்காத நிலையில், நாட்டின் கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் பனிப்பாறைகள் உடைந்ததை தொடர்ந்து போடே கோஷி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பேரழிவில் இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 4,500 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழ்நிலையில், நேபாளத்தின் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக நுவாகோட் மற்றும் ரசுவா மாவட்டங்களில் சிறிய ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நேபாளத்தை விழுங்கிய வெள்ளம் எப்படி உருவானது? சீனாவின் ட்ரோன் கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

கிழக்கு மற்றும் மத்திய நேபாளத்தில் உள்ள டாப்லேஜங், சங்க்ஹுவாசாபா, சோலுகும்பு, கோடாங், ஓகல்டுங்கா, ராமேச்சாப், டோலகா, சிந்துபால்சோக், கவ்ரேபலன்சோக், லலித்பூர், பக்தபூர், காத்மாண்டு மற்றும் தாடிங் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆறுகளின் நீர்மட்டம் உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு நேபாளத்திலும் பல மாவட்டங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. கோர்கா, லாம்ஜங், டோல்பா, ருகும் கிழக்கு, ருகும் மேற்கு, ஜஜார்கோட், தார்ச்சுலா, பைடாடி, டாடெல்டுரா, டோட்டி, கைலாலி மற்றும் கஞ்சன்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்களும் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வானிலை முன்னறிவிப்புகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் நிலவரத்துக்கு ஏற்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லத் தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய பேரழிவில் பெரும் உயிரிழப்பையும் சேதத்தையும் சந்தித்துள்ள நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை வெளியாகியிருப்பது அந்நாட்டு மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நேபாளத்தை உலுக்கிய வெள்ளம்! பலி எண்ணிக்கை 903 ஆக உயர்வு! பேரழிவு குறித்து பிரதமர் வேதனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share