புதிய வருமானவரி சட்ட விதிமுறைகள்.. டிசம்பரில் வெளியீடு..!!
புதிய வருமானவரி சட்ட விதிமுறைகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 11ம் தேதி மக்களவையில் புதிய வருமான வரி மசோதா 2025-ஐ தாக்கல் செய்தார். 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தை மாற்றும் இந்த மசோதா, ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வர உள்ளது. இதற்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த 21ம் தேதி ஒப்புதல் அளித்தார். இதன் விதிமுறைகள் டிசம்பர் 2025 இல் வெளியிடப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரிய உறுப்பினர் ஆர்.என்.பார்பத் தெரிவித்தார்.
இச்சட்டம் வரி முறையை எளிமையாக்குவதையும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதையும், இணக்கத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக, தலைமை ஆணையர் தலைமையில் ‘விதிமுறைகள் மற்றும் படிவங்கள்’ குழு அமைக்கப்பட்டு, வரைவு விதிமுறைகளை தயாரித்து மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் சமர்ப்பித்துள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பின், இந்த விதிமுறைகள் டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும்.
இதையும் படிங்க: எல்லாம் சரி... தரமா இருக்கா முதல்வரே? காலை உணவு திட்டத்தை விமர்சித்த அதிமுக
புதிய சட்டத்தில் 819 பிரிவுகள் 536 ஆகவும், 47 அத்தியாயங்கள் 23 ஆகவும் குறைக்கப்பட்டு, சொற்களின் எண்ணிக்கை 5.12 லட்சத்தில் இருந்து 2.6 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. ‘முந்தைய ஆண்டு’ மற்றும் ‘மதிப்பீட்டு ஆண்டு’ என்ற கருத்துகளை நீக்கி, ‘வரி ஆண்டு’ என்ற ஒருங்கிணைந்த கருத்தை அறிமுகப்படுத்துகிறது. இது வரி தாக்கல் செயல்முறையை எளிதாக்கும். மேலும், எளிய மொழிநடையும், டிஜிட்டல் மதிப்பீட்டு முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
முக்கிய மாற்றங்களாக, ரூ.12.75 லட்சம் வரை வருமான வரி விலக்கு, தாமதமாக வரி தாக்கல் செய்பவர்களுக்கு திரும்பப்பெறும் உரிமை, காலியாக உள்ள வீடுகளுக்கு ‘கருத்து வாடகை’ வரி நீக்கம், மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.80 லட்சம் வரை ஈவுத்தொகை விலக்கு ஆகியவை அடங்கும்.
டிஜிட்டல் தரவு கையாளுதலில் தனியுரிமை உறுதி செய்யப்படும் எனவும், புதிய வரி படிவங்கள் 2026-27 நிதியாண்டு முதல் அறிமுகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் வரி செலுத்துவோருக்கு எளிமையான, வெளிப்படையான அனுபவத்தை வழங்குவதுடன், வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்தும்.
இதையும் படிங்க: #BREAKING: ரயில்வே துறையில் இந்தி மொழி கட்டாயம்! பயன்பாட்டை அதிகரிக்க ஆணை! பயணிக்க அதிருப்தி…