ஒவ்வொரு 50 கி.மீ.க்கும் கால்நடை பராமரிப்பு மையம்.. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டம்..!
தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துக்களைத் தடுக்கும் வகையில் ஒவ்வொரு 50 கி.மீ தொலைவுக்கும் கால்நடைகள் பராமரி்ப்பு மையத்தை அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் முடிவு செய்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் பெரும்பாலானவை, கால்நடைகள் திடீரென சாலையின் குறுக்கே வருவதாலும், சாலைகளில் திரிவதாலும் நடக்கின்றன. இதைத் தடுக்கும் வகையில் கால்நடை பராமரிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு கால்நடை பராமரிப்பு மையத்திலும் குறைந்தபட்சம் 100 விலங்குகளை பராமரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது என தேசிய நெடுஞ்சாலைகள் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு சொந்தமான உபரி நிலங்களில் இந்த கால்நடை பராமரிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த கால்நடை பராமரிப்பு மையத்தில் கால்நடைகளுக்கு மருத்துவ வசதி, உணவு, குடிநீர், முறையான மின்வசதி ஆகியவைகளும், உணவுப் பொருட்களை பாதுகாக்க போதுமான இட வசதியும் இருக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: கார் ஓட்டிகளே உஷார்..! பேலன்ஸ் இல்லனா 2 மடங்கு அபராதம் - சுங்கச்சாவடி பாஸ்டேக் புதிய விதிகள் இன்று முதல் அமல்..!
இது தவிர கால்நடை பராமரிப்பு மையத்தை பாதுகாப்போருக்கு தனியாக அறைகள், கழிவறைகள், குடிநீர் வசதி, அலுவலகம் ஆகியவையும் தனியாக ஏற்படுத்தப்படும். இந்தப் பகுதிக்குள் வேறு எந்த மிருகங்களும் வராமல் தடுக்கும் வகையில் வேலி அமைத்து பாதுகாக்கப்படும்.
இந்த கால்நடை பராமரிப்பு மையம் கண்டிப்பாக ஒவ்வொரு 50 கி.மீ இடைவெளிக்கும் இடையே அமைக்கப்பட வேண்டும் என்பதை இதற்கான ஆலோசகர் முடிவு செய்ய வேண்டும். தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் கால்நடைகள் நடமாட்டம் எங்கு அதிகமாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதற்கு அருகே இந்த பராமரிப்பு மையத்தை அமைக்க வேண்டும்.
கால்நடை பராமரிப்பு மையம், கிராமப்புறத்துக்கு அருகே அல்லது நகர்புறத்துக்கு புறநகரிலோ அமைய வேண்டும். இந்த கால்நடை பராமரிப்பு மையத்துக்கு தேவையான நிதி கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியில் இருந்து வழங்கப்பட உள்ளது.
கடந்த காலங்களில் கால்நடைகளை தேசிய நெடுஞ்சாலைகளில் உலவுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்தும் பலன் இல்லை. கால்நடைகளைக் கைப்பற்றி உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தும் கால்நடைகள் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகள் வலம்வந்தன. இதையடுத்து, இந்த பராமரிப்பு மையத்துக்கு தேசிய நெடுஞ்சாலை திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: 41 நாடுகளின் மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை... படிப்படியாக அமல் செய்ய அதிபர் ட்ரம்ப் திட்டம்..!