கேரளாவில் மீண்டும் பரவும் நிபா வைரஸ்! கோழிக்கோட்டில் ஒருவருக்கு தொற்று உறுதி! கண்காணிப்பு தீவிரம்!
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் 43 வயதான நபருக்கு, ‘நிபா’ வைரஸ் பாதிப்பு முதற்கட்ட சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுதும் தீவிர சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோழிக்கோடு: கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் பெரோக்கைச் சேர்ந்த 43 வயது தொழிலதிபர் ஒருவருக்கு முதற்கட்ட பரிசோதனையில் நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் தீவிர சுகாதார எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இந்த நபர், சில நாட்களில் குணமடைந்த நிலையில், மீண்டும் கடும் காய்ச்சல், உடல்வலி, வாந்தி மற்றும் மூச்சுத் திணறல் ஆகிய பிரச்சினைகளுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நேற்று முன்தினம் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவரது ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டபோது, மூளை அழற்சி உள்ளிட்ட தீவிர அறிகுறிகளுடன் நிபா வைரஸ் பாதிப்பும் முதற்கட்டத்தில் உறுதி செய்யப்பட்டது.
தற்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இறுதி உறுதிப்படுத்தலுக்கான மாதிரிகள் மகாராஷ்டிரா புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா வைரஸ்!! நோய் தொற்றால் அடுத்தடுத்து பாதிக்கப்படும் மாணவர்கள்! ஹை அலர்ட்!
நிபா வைரஸ் பரவல் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, ராமநாட்டுகரா நகராட்சிப் பகுதி முழுவதும் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பெற்ற மருத்துவமனை ஊழியர்கள், அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அனைவரும் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவருடன் தொடர்பில் இருந்த மற்றவர்களை கண்டறியும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிபா வைரஸ் என்பது வவ்வால், பன்றி உள்ளிட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய ஒரு தீவிர வைரஸ் ஆகும். இது சுவாச மண்டலத்தையும், நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும். காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி, மூச்சுத் திணறல், மயக்கம் மற்றும் மூளை அழற்சி ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். வவ்வால் கடித்த பழங்களை உண்ணாமல் இருப்பது, காய்ச்சல் அறிகுறி தென்பட்ட உடனே மருத்துவ உதவி பெறுவது ஆகியவை முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகளாகும்.
கேரளா மாநில சுகாதாரத் துறை முழு எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் கோழிக்கோட்டில் ஏற்பட்ட நிபா பாதிப்புகள் நினைவுக்கு வரும் வகையில், இந்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் மக்களுக்கு அமைதியுடன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: அரசியல் என்ட்ரி கன்பார்ம் ஆனால்... மெகா ட்விஸ்ட் வைத்த ராகவா லாரன்ஸ்... வீடியோவில் பேசியது என்ன?