ஜெயலலிதா பாணியை பின்பற்றுங்கள் CM விஜய்!! என்.எல்.சி பங்குகள் விற்பனை! எடப்பாடி பழனிசாமி அட்வைஸ்!
என்.எல்.சி பங்குகளைத் தனியாருக்கு விற்கக் கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
என்எல்சி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், அந்தப் பங்குகளை தமிழக அரசே வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்எல்சி நிறுவனத்தை தனியார்மயமாக்கும் எந்த முயற்சிக்கும் அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
அறிக்கையில், மத்திய அரசும் என்எல்சி நிர்வாகமும் மேற்கொண்டு வரும் பங்கு விற்பனை நடவடிக்கைக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ள இபிஎஸ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2013-ஆம் ஆண்டு எடுத்த முடிவை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டுள்ளார். அப்போது தமிழக அரசே என்எல்சி பங்குகளை வாங்கியதன் மூலம், அந்த நிறுவனத்தின் பங்குகள் தனியார் வசம் செல்லாமல் தடுக்கப்பட்டதாகவும், தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அப்போது தமிழக அரசு வாங்கிய பங்குகளின் மதிப்பு தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும், அதுபோன்ற முடிவை தற்போதைய தமிழக அரசும் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். என்எல்சி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: அப்போதே தடுத்தேன்! எடப்பாடி கேக்கல!! மீண்டும் போர்க்கொடி தூக்கிய எஸ்.பி வேலுமணி! அதிமுகவில் பரபரப்பு!
என்எல்சி நிறுவனம் கடலூர் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதுடன், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறது. எனவே, நிறுவனத்தின் எதிர்காலம் மற்றும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எந்த முடிவும் எடுக்கப்பட வேண்டும் என்றும் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பங்கு விற்பனை கொள்கைக்கு எதிராக போராடி வரும் தொழிற்சங்கங்களுக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும், என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதுகாப்பு, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் தமிழக அரசின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பது அரசியல் மற்றும் தொழிலாளர் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவில் அதிரடி மாற்றம்! எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதனுக்கு மீண்டும் துணை பொது செயலாளர் பதவி!