வேகமாக பரவும் வதந்தியால் அலைமோதும் கூட்டம்..!! பாட்டில்களில் NO பெட்ரோல்..!! பங்க்குகளுக்கு பறந்த உத்தரவு..!!
பெட்ரோல் பங்க்குளில் கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல்-டீசல் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் காரணமாக வளைகுடா பகுதியிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக அளவில் எரிபொருள் விலை ஏற்றம் ஏற்படும் அச்சம் எழுந்துள்ள நிலையில், இந்தியாவில் குறிப்பாக வணிக ரீதியான எல்பிஜி (LPG) சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வீட்டு உபயோக சமையல் சிலிண்டர்களை பாதுகாக்கும் நோக்கில் வணிக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை குறைக்கப்பட்டதால், ஓட்டல்கள், உணவகங்கள் உள்ளிட்ட உணவுத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஓட்டல்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் சமையலுக்கு பயன்படுத்தும் கியாஸ் கட்டணத்தையும் பில்லுடன் சேர்த்து வசூலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக வீட்டு சிலிண்டர்களுக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில், தமிழகம் முழுவதும் மக்கள் கியாஸ் ஏஜென்சிகளை முற்றுகையிட்டு அதிக அளவில் சிலிண்டர்கள் வாங்க முயன்றனர்.
இந்த சூழலில், "ஈரான் போர் காரணமாக பெட்ரோல்-டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்படும், விலை கணிசமாக உயரும்" என்ற வதந்தி நேற்று முன்தினம் மாலை திடீரென சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் வாகன ஓட்டிகள் பீதியடைந்து பெட்ரோல் பங்குகளை நோக்கி படையெடுத்தனர். தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிய பின்னர், கேன்கள், பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களில் கூடுதலாக பெட்ரோல், டீசலை சேமித்து செல்லும் போக்கு அதிகரித்தது.
இதையும் படிங்க: பாட்டிலில் பெட்ரோல் வாங்க தடை! பதுக்கலை தடுக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!
இதையடுத்து, எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு பெட்ரோல் டீசல் விற்பனையாளர்கள் சங்கம் உடனடியாக விளக்கம் அளித்தன. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் இல்லை என்றும், சுமார் 7,000 பங்குகளில் 15 முதல் 21 நாட்களுக்கு தேவையான கையிருப்பு உள்ளது என்றும் தெளிவுபடுத்தினர். பொதுமக்கள் பீதியடைந்து அதிக அளவில் வாங்கி சேமிப்பதால் செயற்கை தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்தனர்.
இருப்பினும், வதந்தியின் தாக்கம் காரணமாக சென்னை உள்பட திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசைகள் தொடர்ந்தன. இன்று மூன்றாவது நாளாகவும் இந்த அலைமோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முரளி கூறுகையில், "வாகனங்களுக்கு தேவையான அளவு எரிபொருள் விற்பனை செய்ய அனுமதி உள்ளது. ஆனால் கேன்கள், பாட்டில்களில் பெட்ரோல்-டீசல் வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பங்க் உரிமையாளர்களும் இதை கடைபிடிக்க தொடங்கியுள்ளனர்" என்றார்.
சில இடங்களில் கேன்களில் எரிபொருள் வாங்க முயலும் மக்களால் தகராறு ஏற்பட்டதால், பங்க் உரிமையாளர்கள் போலீஸ் பாதுகாப்பு கோரினர். அதன்பேரில் சில பங்குகளில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தமிழகம் முழுவதும் எரிபொருள் விநியோகம் சீராக உள்ளதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். பொதுமக்கள் அச்சமின்றி தேவைக்கு ஏற்ப மட்டும் எரிபொருள் நிரப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பீதி அடுத்த சில நாட்களில் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியா சர்வாதிகார நாடா? நெவர்! மோடி ஒரு முன்மாதிரி தலைவர்! ஆஸி., முன்னாள் பிரதமர் புகழாரம்!