ஒடிசாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை! நிலச்சரிவில் சிக்கி 2 பேர் மரணம்! 2 பேர் மாயம்!
ஒடிசாவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பெய்த கனமழையால் மாநிலம் முழுதும் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருவர் பலியான நிலையில், இருவர் மாயமாகினர்.
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஒடிஷா மாநிலம் முழுவதும் கனமழை பெய்து, இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கஜபதி, ராயாகாடா, கோரபுட் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி, இருவர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல், ராயாகர் பகுதியில் 70 வயது மூதாட்டி கர்த்திகா சபாரா மற்றும் அவரது மகன் ராஜிப் சபாரா ஆகியோர் மாயமாகியுள்ளனர். இதுவரை, கனமழையால் ஏற்பட்ட பேரழிவில் குறைந்தது இரு உயிரிழப்புகள் மற்றும் இருவர் மாயமானதாக பதிவாகியுள்ளன.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) அறிக்கையின்படி, வங்கக்கடல் ஒட்டியுள்ள ஒடிஷாவின் தெற்கு கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த இரண்டு நாட்களாக உட்புற மாவட்டங்களில் கனமழையை ஏற்படுத்தியது. இது வடக்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, அக்டோபர் 2 அன்று மாலை 5 மணியளவில் கோபால்பூர் கடற்கரை பகுதியை கடந்தது. அப்போது, மணிக்கு 73 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது.
இதையும் படிங்க: Breaking! உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வட தமிழகத்தில் 3 நாட்கள் கொட்டப்போகும் கனமழை!
தற்போது, இந்த தாழ்வு மண்டலம் மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 3 வரை, கடற்கரை பகுதிகளில் 55-65 கி.மீ. வேக சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதாகவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கனமழையின் தாக்கம் கடுமையாக உள்ள கஜபதி மாவட்டத்தில், ஆறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், பாஸ்ட்ரியாகுடா கிராம பஞ்சாயத்தில் திருநாத் நாயக்கும், மெரிபள்ளி கிராம பஞ்சாயத்தில் லட்சுமன் நாயக்கும் உயிரிழந்தனர். ராயாகர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, மூதாட்டி கர்த்திகா சபாரா மற்றும் அவரது மகன் ராஜிப் சபாரா ஆகியோர் மாயமாகியுள்ளனர்.
மீட்புக்குழுவினர் அவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். அதேபோல், மகேந்திரகிரி மலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், அங்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட 24 பேர் சிக்கித் தவித்தனர். தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் (OSDRF) அவர்களை பத்திரமாக மீட்டனர்.
கனமழையால், கஜபதி, ராயாகாடா, கோரபுட், கஞ்சம் உள்ளிட்ட மாவட்டங்களில் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சங்கா, கோடசலா, ஹரபஹஞ்சி ஆகிய ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன. இதன் காரணமாக, 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
சாலைகள், பாலங்கள் சேதமடைந்து, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோரபுட் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 326-ல் உள்ள ஒரு பாலம் மழைநீரால் மூழ்கியது. கிழக்கு கடற்கரை ரயில்வேயில் (ECoR) பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, சில ரயில்கள் சுருக்கமாக இயக்கப்பட்டன. கஞ்சம் மாவட்டத்தில் மரங்கள் விழுந்து, சில வீடுகள் சேதமடைந்தன. மூன்று பேர் சுவர் சரிவில் காயமடைந்தனர்.
மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீர்நிலைகள் அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்களை அப்புறப்படுத்தி, நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளன. பேரிடர் மேலாண்மை குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரிலீஃப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
முதல்வர் மோகன் சரன் மஜி, தென் மாவட்டங்களில் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறும், நீர்நிலைகளை தீவிரமாக கண்காணிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (SDRF) ஒவ்வொருவருக்கும் 4 லட்சம் ரூபாய் இழப்பீட்டாக வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. வானிலை மையம், 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. மழை தொடர வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திமுக? அதிமுக? தவெக? என்ன முடிவு பண்ணப்போறீங்க! ராமதாஸ், அன்புமணியுடன் தனித்தனியாக சந்திப்பு!