வீட்டுக்காவலில் இருந்து தப்பி சுவர் ஏறிக்குதித்த முதல்வர்!! விரட்டி விரட்டி தடுத்த காவலர்கள்!
நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்த வந்த காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, போலீசார் தடுத்ததால் சுவர் ஏறி குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் ஜூலை 13, 1931 அன்று மகாராஜா ஹரி சிங்கின் தோக்ரா ஆட்சிக்கு எதிராக போராடிய 22 காஷ்மீரிகள், ஸ்ரீநகர் மத்திய சிறையில் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தனர். இந்த நிகழ்வு, காஷ்மீரின் முதல் அரசியல் எழுச்சியாகவும், பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருந்த தோக்ரா ஆட்சிக்கு எதிரான மக்களின் குரலை வெளிப்படுத்திய முக்கிய நிகழ்வாகவும் கருதப்படுகிறது.
இதை நினைவுகூர, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 13 தியாகிகள் நினைவு நாளாக அனுசரிக்கப்பட்டு வந்தது. இந்நாளில், அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள், ஸ்ரீநகரின் நவ்ஹட்டாவில் உள்ள நக்ஷ்பந்த் சாஹிப் தியாகிகள் கல்லறைக்கு (மசார்-எ-ஷுஹதா) சென்று அஞ்சலி செலுத்துவது வழக்கம். 2019 ஆம் ஆண்டு ஆர்ட்டிகிள் 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, இந்த நாள் அரசு விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது, இது காஷ்மீர மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தியாகிகள் நினைவு நாளை அனுசரிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சித் (NC) தலைவர் பாரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சி (PDP) தலைவர் மெஹபூபா முப்தி, மக்கள் மாநாட்டு கட்சித் தலைவர் சஜாத் லோன், மற்றும் பல அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: செய்தி தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள்... எங்க போகுது திராவிட மாடல் அரசு? தமிழிசை சரமாரி கேள்வி
ஸ்ரீநகர் மாவட்ட நிர்வாகம், பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி, கல்லறைக்கு செல்ல அனுமதி மறுத்தது. வீடுகளின் வாயில்கள் பூட்டப்பட்டு, குப்கர் சாலை மற்றும் நவ்ஹட்டா பகுதிகளில் பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கையை உமர் அப்துல்லா “வெளிப்படையான ஜனநாயக விரோத செயல்” என விமர்சித்தார், மேலும் இது ஜல்லியன்வாலா பாக் படுகொலையை ஒத்தது எனக் குறிப்பிட்டார். மெஹபூபா முப்தி, இந்த கட்டுப்பாடுகள் டெல்லிக்கும் காஷ்மீருக்கும் இடையேயான “இதயங்களின் இடைவெளியை” (தில் கி தூரி) வெளிப்படுத்துவதாகக் கூறினார்.
இந்த நிலையில் வீட்டுக்காவலில் இருந்து தப்பிய முதலமைச்சர் உமர் அப்துல்லா, எந்த முன்னறிவிப்பும் இன்றி நவ்ஹட்டாவில் உள்ள தியாகிகள் கல்லறைக்கு சென்றார். காவல்துறையினர் அவரது வாகனத்தை நவ்ஹட்டா சவுக்கில் தடுத்து, கல்லறையின் வாயிலை பூட்டியிருந்தனர். ஆனால், உமர் அப்துல்லா, தனது பாதுகாப்பு வீரர்கள் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் பிற தலைவர்களுடன், கல்லறையின் சுவரை ஏறி குதித்து, 1931 தியாகிகளுக்கு பூக்கள் தூவி, பாத்திஹா ஓதி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வு, சமூக ஊடகங்களில் வைரலாக, அவரது உறுதியை பறைசாற்றியது.
உமர், “நாங்கள் யாருடைய அடிமைகளும் இல்லை, மக்களின் பணியாளர்கள்” என்று கூறி, காவல்துறையின் செயல்பாட்டை “சட்டவிரோதமானது” என விமர்சித்தார். அவருடன், அமைச்சர் சகினா இத்தூ ஸ்கூட்டரில் சென்று, பாரூக் அப்துல்லா ஆட்டோவில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்த கட்டுப்பாடுகள், காஷ்மீரின் வரலாற்றை அழிக்கும் முயற்சியாகவும், ஜனநாயக உரிமைகளை மீறுவதாகவும் பார்க்கப்பட்டன. உமர், இந்த நிகழ்வை “தேர்ந்தெடுக்கப்படாதவர்களின் கொடுங்கோல் ஆட்சி” என விமர்சித்து, மறைந்த பாஜக தலைவர் அருண் ஜெய்ட்லியின் வார்த்தைகளை மேற்கோள் காட்டினார். மறுபுறம், பாஜகவின் சுனில் ஷர்மா, 1931 ஆம் ஆண்டு போராட்டத்தை “கலவரம்” எனவும், தியாகிகளை “தேசத்துரோகிகள்” எனவும் விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதையும் படிங்க: ஜிலேபி, சமோசா சாப்பிட போறீங்களா உஷார்.. ஆபத்தான உணவாக மாறிய பேவரேட் ஸ்நாக்ஸ்.. கலக்கத்தில் இளசுகள்..!