×
 

விஸ்வரூபம் எடுக்கும் SIR விவகாரம்..!! 2வது நாளாக எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!! நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு..!!

எஸ்.ஐ.ஆர். விவகாரத்தை முன்னிறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் இன்று 2வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்றும் (டிச. 3) எதிர்க்கட்சிகளின் தீவிர அமளி காரணமாக மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. எஸ்.ஐ.ஆர். (SIR) பணிகள், டெல்லி காற்று மாசுபாடு, நெல் கொள்முதல் ஈரப்பதம், டெல்லி கார் குண்டுவெடிப்பு, தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி விவாதம் நடத்தக் கோரின.

நாடாளுமன்றத்தில் குளிர் கால கூட்டத்தொடர் நேற்று நடந்தது. மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையேற்று நடத்தினார். துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் மாநிலங்களவை நடந்தது. அவர் துணை ஜனாதிபதியான பின்னர் கலந்து கொள்ளும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும்.

கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே (டிச. 2) இரு அவைகளும் முழு நாளுக்கும் ஒத்திவைக்கப்பட்டன. இன்றும் அவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகர் துவார் வாயிலில் போராட்டம் நடத்தினர். “எஸ்.ஐ.ஆர்… எஸ்.ஐ.ஆர்…” என்று கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். மேலும் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர். பாலு போன்றோரும் இதில் பங்கேற்று, "எஸ்.ஐ.ஆர். நிறுத்து" என கோஷமிட்டனர்.

இதையும் படிங்க: SIR - கால அவகாசம் நீட்டிப்பு..!! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!!

எஸ்.ஐ.ஆர். என்பது தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியலை தீவிரமாக திருத்தும் செயல்முறையாகும். இது வாக்காளர்களின் தகவல்களை சரிபார்க்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், எதிர்க்கட்சிகள் இதை "உளவு செயல்பாடு" என விமர்சித்து வருகின்றன. குறிப்பாக, சஞ்சார் சாத்தி எனும் அரசு செயலி மூலம் தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படுவதாகவும், இது தேர்தல் ஜனநாயகத்தை பாதிக்கும் எனவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

“ஜனநாயகத்தைக் காப்பாற்றுவோம்; அநீதிக்கு எதிராகப் போராட்டம் தொடரும்” என்று காங்கிரஸ் மாநிலங்களவைக் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஊடகங்களிடம் தெரிவித்தார். முன்னதாக நேற்று பிரதமர் மோடி கூட்டத்தொடர் தொடக்கத்தில் செய்தியாளர்களிடம், “இது வெறும் சடங்கல்ல; புதிய எம்.பி.க்கள் அதிகம் பேச வேண்டும்; அமளியை அவைக்குள்ளே கொண்டுவர வேண்டாம்; வெளியே வைத்துக்கொள்ளுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். மேலும், “எந்தப் பிரச்சினையையும் விவாதிக்க மத்திய அரசு தயார்; எதிர்க்கட்சிகள் சுமுகமாக ஒத்துழைக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

இருப்பினும், தொடர்ச்சியான அமளி காரணமாக இன்று காலை அவை கூடிய சிறிது நேரத்திலேயே மக்களவை முதலில் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை முக்கிய மசோதாக்கள் எதுவும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

பல்வேறு முக்கிய நிதி, பொருளாதார மசோதாக்களை இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில், தொடர் அமளி அவை நடவடிக்கைகளை முடக்கியுள்ளது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் 19 வரை நடைபெற உள்ளது. எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருவதால், அடுத்த நாட்களில் அவை நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கையை வலுப்படுத்த, மேலும் போராட்டங்களை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து நாடு முழுவதும் விவாதத்தை தூண்டியுள்ளது.

இதையும் படிங்க: விறுவிறு SIR... நாடு முழுவதும் 32.23 கோடி SIR படிவங்கள் டிஜிட்டல் மயமாக்கம்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share