ராணுவம் வெளியேற 24 மணி நேரம் கெடு! பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடிக்கும் போராட்டம்!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ராணுவம் வெளியேற அரசுக்கு எதிராக போராடும் அவாமி அதிரடி கூட்டுக்குழு 24 மணி நேரம் கெடு விதித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு செயல்படும் அவாமி அதிரடி கூட்டுக்குழு பாகிஸ்தான் ராணுவம் வெளியேற வேண்டும் என 24 மணி நேர கெடு விதித்துள்ளது. இந்த அறிவிப்பு அந்தப் பகுதியில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடிப்படை வசதிகள், உரிமைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் அமைதியாக நடந்த போராட்டங்கள் பின்னர் பெரும் மக்கள் இயக்கமாக மாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில், அங்கு ராணுவம் அதிக அளவில் குவிக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது நடந்த தாக்குதல்களில் இதுவரை 58 பேர் உயிரிழந்ததாகவும் போராட்ட அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன. இதனை கண்டித்து பெண்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்த வன்முறை..!! 11 பேர் உயிரிழப்பு..!!
ராவலகோட் பகுதியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவாமி அதிரடி கூட்டுக்குழு தலைவர் சர்தார் அமான் காஷ்மீரி பேசினார். அவர் பேசுகையில், தாங்கள் அமைதியான வழியில் மட்டுமே போராடி வருவதாகவும், போராட்டத்தை வன்முறையாக மாற்றும் சூழலை உருவாக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், பாகிஸ்தான் அரசு இப்பகுதியில் ராணுவத்தை அதிகரிக்க எந்த உரிமையும் இல்லை என அவர் குற்றம்சாட்டினார். ஐநா சபை தீர்மானங்களின் அடிப்படையில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்றும் அவர் கடுமையாக தெரிவித்தார்.
“இது எங்களது தாய்நாடு. எந்த சூழலிலும் நாங்கள் எங்கள் உரிமைகளுக்காக போராடுவோம்” எனவும் அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு வெளியாகியதையடுத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாதுகாப்பு சூழல் மேலும் பதற்றமடைந்துள்ளது.
இந்த விவகாரம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரம் அங்கு என்ன நடைபெறும் என்பது குறித்து உலக அரசியல் வட்டாரங்கள் கவனமாக கண்காணித்து வருகின்றன.
இதையும் படிங்க: இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூடு! 27 பேர் பலி! பாக்., ராணுவம் மீது கூட்டு அவாமி அதிரடிக்குழு புகார்!