Painkillers-களால் சிறுநீரகத்திற்கு ஆபத்து.. மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் வார்னிங்!!
ஆன்டிபயாட்டிக்குகளைத் தேவையில்லாமல் உட்கொள்வது நுண்கிருமி எதிர்ப்புத் திறன் (AMR) அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும்.
வலி நிவாரணி மற்றும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் தொடர்ந்து உட்கொள்வது நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட தீவிர உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (CDSCO) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் டாக்டர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார். ஸ்டெராய்டு அல்லாத வீக்க எதிர்ப்பு மருந்துகள் (NSAIDs) எனப்படும் பெரும்பாலான வலி நிவாரணிகள் ‘அட்டவணை எச்’ பிரிவிலும், பெரும்பாலான ஆன்டிபயாட்டிக்குகள் ‘அட்டவணை எச்1’ பிரிவிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் பதிவுபெற்ற மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் இவற்றை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். மருந்துக் கடைகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் சுய மருத்துவத்தை ஊக்குவிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சி.எம். விஜய்க்கு பேரதிர்ச்சி... ஆய்வு செய்யும் போதே மின்வாரிய ஊழியர்கள் செய்த சம்பவம்...!
இந்தியாவில் சுமார் 13.8 கோடி பெரியவர்கள் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற மருத்துவ ஆய்வுகள் பின்னணியில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. NSAIDs சிறுநீரகங்களுக்கு இரத்த ஓட்டத்தைக் குறைத்து அவற்றின் வடிகட்டும் திறனை பாதிக்கும். ஆன்டிபயாட்டிக்குகளைத் தேவையில்லாமல் உட்கொள்வது நுண்கிருமி எதிர்ப்புத் திறன் (AMR) அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும்.
பொதுமக்களுக்கு CDSCO அளித்துள்ள முக்கிய அறிவுரைகள்: லேசான தலைவலி, உடல்வலி அல்லது காய்ச்சலுக்காக கடையில் நேரடியாக வலி நிவாரணி அல்லது ஆன்டிபயாட்டிக் வாங்கித் தொடர்ந்து உட்கொள்ள வேண்டாம்.
வைரஸ் தொற்று, சளி, சாதாரண காய்ச்சல் போன்றவற்றுக்கு ஆன்டிபயாட்டிக் தேவையில்லை. ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அல்லது இதயப் பிரச்சினை உள்ளவர்கள் வலி நிவாரணி பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரிடம் முழு ஆரோக்கிய நிலையைத் தெரிவிக்க வேண்டும். அறிகுறி தொடர்ந்தால் சுய மருத்துவத்தை விட்டு தகுதியான மருத்துவரை அணுகவும். பரிந்துரைக்கப்பட்ட ஆன்டிபயாட்டிக்கை மற்றவர்களுடன் பகிரவோ மீதமுள்ள மருந்தைப் பயன்படுத்தவோ கூடாது.
மருத்துவர்களுக்கு, குறைந்தபட்ச பயனுள்ள அளவை மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே பரிந்துரைக்கவும், நோயாளியின் வயது மற்றும் பிற நோய்களைக் கருத்தில் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் முறையான மருந்துச் சீட்டு ஆய்வு முறையை அமல்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. சுய மருத்துவ பழக்கத்தை மாற்றி, மருத்துவர் ஆலோசனையைப் பின்பற்றுவதே சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சிறந்த வழி என்பதே இந்த அறிவிப்பின் மையச் செய்தி.
இதையும் படிங்க: 41.95% ஆக உயர்ந்தது மாற்று எரிபொருள் பயன்பாடு.. இந்திய வாகனச் சந்தையில் வரலாறு!