×
 

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்... திடீரென பல்டி அடித்த பாகிஸ்தான்? இந்திய ஆதரவாளர்கள் என குற்றச்சாட்டு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள போராட்டக்காரர்களில், 99 சதவீதம் பேர் தேச பக்தி கொண்டவர்கள் என பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகரான ரானா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.

‘போராட்டக்காரர்களில் 99% பேர் தேசபக்தர்கள்’... பாகிஸ்தான் பிரதமர் ஆலோசகரின் அதிரடி பேச்சு!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களில் 99 சதவீதம் பேர் தேசபக்தர்கள் என, பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் ரானா சனாவுல்லா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பொருளாதார நெருக்கடி, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்னைகளை முன்வைத்து மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலமாக இந்த போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

இதற்கிடையே, அங்கு மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், போராட்டங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் ஊடுருவியுள்ளதாக பாகிஸ்தானில் ஆளும் முஸ்லிம் லீக் நவாஸ் பிரிவு குற்றம்சாட்டியது.

இதையும் படிங்க: “இனி பாகிஸ்தான் மீது கைவைத்தால் நாங்க இறங்கி அடிப்போம்...” - சவுதி, துருக்கி செயலால் இந்தியாவிற்கு ஆபத்தா?

மேலும், போராட்டக்காரர்களில் சிலர் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவர்கள் பாகிஸ்தானின் எதிரிகள் என்றும் அந்த கட்சி தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் போராட்டங்கள் பாகிஸ்தான் அரசியலில் முக்கிய விவாதமாக மாறியுள்ளன.

இந்த சூழலில், சமீபத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில் பங்கேற்று பேசிய பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் ரானா சனாவுல்லா, போராட்டக்காரர்களுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டங்களில் ஈடுபட்டு வருபவர்களில் 99 சதவீதம் பேர் தேசபக்தி கொண்டவர்கள் என குறிப்பிட்டார். மேலும், போராட்டங்களை முன்னெடுத்து வரும் கூட்டு அவாமி நடவடிக்கைக் குழுவுடன், தங்கள் கட்சியின் பிரதிநிதிகள் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ள அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பிரதமரின் ஆலோசகர் தெரிவித்திருப்பது, அந்நாட்டின் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொருளாதார நிலை, விலைவாசி உயர்வு மற்றும் அத்தியாவசிய தேவைகள் தொடர்பான அதிருப்தி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், போராட்டக்காரர்களை ஒட்டுமொத்தமாக எதிரிகளாக பார்க்க முடியாது என்பதை ரானா சனாவுல்லாவின் கருத்து வெளிப்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

ஒருபுறம் போராட்டங்களில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மறுபுறம் போராட்டத்தில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் தேசபக்தர்கள் என பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகரே கூறியிருப்பது புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

இதனால், ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டங்களை பாகிஸ்தான் அரசு இனி எவ்வாறு கையாளப்போகிறது என்பதும், போராட்டக்காரர்களுடன் நடைபெற உள்ளதாக கூறப்படும் பேச்சுவார்த்தை எந்த முடிவை ஏற்படுத்தும் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பாகிஸ்தானில் நடைபெறும் எஸ்.சி.ஓ. உச்சி மாநாடு... பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்க முடிவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share