×
 

நாடாளுமன்ற மக்களவையில் கடும் அமளி.. சபாநாயகரை முற்றுகையிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள்..!

நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமலியில் ஈடுபட்டதால் அவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் மத்திய அரசு வரி விதிப்பு, விளையாட்டு, கல்வி, சுரங்கம், கப்பல் போன்ற துறைகள் தொடர்பாக 8 முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் பல முக்கிய பிரச்சினைகளை எழுப்பவும், அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் வியூகம் வகுத்துள்ளன.

பொருளாதார மந்தநிலை, வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினைகள், மற்றும் பணவீக்கம் போன்ற முக்கிய விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளன. சில மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளன. ஆபரேஷன் சிந்தூர் மற்றும் போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பு, பீகாரில் நடத்தப்படும் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் திருத்தம் உள்ளிட்ட பல விவகாரங்கள் தொடர்பாக கேள்வி எழுப்ப திட்டமிட்டனர். முன்னதாக, கீழடி ஆய்வறிக்கையை வெளியிடுவதில் மத்திய அரசு தாமதம் காட்டுவதால் அது குறித்து அவையை ஒத்திவைத்து ஆலோசிக்க மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா நோட்டீஸ் வழங்கினார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கேள்வி நேரத்தோடு இன்று தொடங்கியது. அப்போது மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். உறுப்பினர்களை பேசவிடாமல் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கூச்சலிட்டனர். சபாநாயகரின் இருக்கைக்கு முன்பு திரண்டு முழக்கமிட்டனர். பகல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி எதிர் கட்சி எம்பிக்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். 

இதையும் படிங்க: மழைக்கால கூட்டத் தொடர் தொடக்கம்... ஆரோக்கியமாக விவாதிக்க எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

சபாநாயகர் சமாதானப்படுத்தும் முயற்சித்தும், எதிர் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுள்ளனர். மக்களவையில் உறுப்பினர்களை பேசவிடாமல் முழக்கங்களை எழுப்பினர். கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி அளிக்காத நிலையில், அமளி நீடித்தது. இதன் காரணமாக பிற்பகல் 12 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: முற்றுபெறாத கீழடி பிரச்சனை..! மாநிலங்களவையில் திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share