×
 

கேரளாவில் வாக்கு எண்ணிக்கை தீவிரம்..!! தோல்வியை ஒப்புக்கொண்டாரா பினராயி விஜயன்..?? அதிர்ச்சி செயல்..!!

தேர்தல் நடைமுறை விதிகள் அமலானதும் இந்த மாற்றத்தை செய்துவிட்டார்.

கேரளாவில் இன்று காலை முதல் தீவிரமாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின் மத்தியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான பினராயி விஜயன் தனது சமூக ஊடக பக்கங்களில் ‘கேரள முதலமைச்சர்’ என்ற பதவியை நீக்கியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை அவர் தோல்வியை முன்கூட்டியே ஒப்புக்கொண்டதாக அரசியல் வட்டாரங்களில் கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) ஆட்சியை நடத்தி வந்த கேரளாவில், ஏப்ரல் 9 அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இன்று அந்த வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தொடக்கம் முதலே ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப் - காங்கிரஸ் தலைமையில்) முன்னிலை வகித்து வருகிறது. என்றாலும், எல்டிஎஃப் தரப்பு இறுக்கமாகப் போட்டியைத் தொடர்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே பினராயி விஜயன் தனது ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் உள்ள பயோவை மாற்றியுள்ளார். ‘கேரள முதலமைச்சர்’ என்பதை நீக்கிவிட்டு, ‘பொலிட் பீரோ உறுப்பினர், கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா (மார்க்சிஸ்ட்)’ என்று புதுப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றம் தோல்வியை ஒப்புக்கொண்ட செயல் என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதையும் படிங்க: கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அதிரடி மீட்சி: எக்ஸிட் போல் முடிவுகளில் 'யுடிஎப்' வெற்றி வாய்ப்பு - இடதுசாரிகளுக்குப் பின்னடைவா?

இந்தக் குற்றச்சாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக மறுத்துள்ளது. கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கொடியேரி இதுகுறித்து விளக்கம் அளித்தார். “தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே, மார்ச் 16-ம் தேதி பினராயி விஜயன் தனது பயோவை மாற்றினார். தேர்தல் நடைமுறை விதிகள் அமலுக்கு வந்ததும் இந்த மாற்றம் செய்யப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்குப் பயந்து அவர் பயோவைத் திருத்தியதாகக் கூறுவது தவறான தகவல்” என்று அவர் தெரிவித்தார்.

எல்டிஎஃப் தரப்பினர் மீண்டும் ஆட்சியைத் தக்கவைப்போம் என நம்பிக்கை தெரிவித்து வந்த நிலையில், வெளியான எக்ஸிட் போல் முடிவுகள் யுடிஎஃப்-க்கு சாதகமாக இருந்தன. இன்றைய வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பக் கட்டத்திலும் காங்கிரஸ் கூட்டணியே முன்னிலையில் இருப்பது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள அரசியலில் பினராயி விஜயன் இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பதவி வகித்து வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் பல்வேறு சர்ச்சைகள், வளர்ச்சித் திட்டங்கள், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல அம்சங்கள் பேசப்பட்டன. தற்போது வாக்கு எண்ணிக்கை முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முடிவுகள் எப்படி இருந்தாலும், பினராயி விஜயனின் பயோ மாற்றம் இந்தத் தேர்தல் பரபரப்புக்கு கூடுதல் பரிமாணத்தை அளித்துள்ளது.

இதையும் படிங்க: கேரளாவின் திரிச்சூர் பூரம் பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து! 13 பேர் உயிரிழப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share