இனி NO TEAR.. NO WET..!! இந்தியாவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்..!! RBI அதிரடி..!!
இதற்கான சோதனை ஓட்டம் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
நாட்டின் பணப் புழக்கத்தில் புரட்சிகர மாற்றத்தை கொண்டு வரும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) காகித ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக நீடித்து உழைக்கும் பாலிமர் (பிளாஸ்டிக்) நோட்டுகளை அறிமுகப்படுத்தும் பணிகளை வேகப்படுத்தியுள்ளது. இதன் முதல் கட்டமாக அடுத்த ஆண்டு (2027) முதல் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை சோதனை அடிப்படையில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
இதற்கான முன்னேற்பாடாக, ஆர்பிஐயின் நாணய அச்சடிப்பு நிறுவனமான பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரான் பிரைவேட் லிமிடெட் (பிஆர்பிஎன்எம்பிஎல்) உலகளாவிய டெண்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. பாலிமர் நோட்டுகளுக்கான சிறப்பு 'பாலிமர் சப்ஸ்ட்ரேட்' தாள்களை (BOPP - Biaxially Oriented Polypropylene அடிப்படையிலான ஒபேசிஃபைட் சப்ஸ்ட்ரேட்) வழங்க தகுதியான உலகளாவிய நிறுவனங்களை அழைத்துள்ளது. ஆகஸ்ட் 18-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். முதற்கட்ட தேவைக்கு மொத்தம் 68,000 ரீம்கள் (ஒரு ரீம் = 500 தாள்கள்) பாலிமர் தாள்கள் கோரப்பட்டுள்ளன. இதில் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகளுக்கு தலா 34,000 ரீம்கள் ஒதுக்கப்படும்.
பிளாஸ்டிக் நோட்டுகளின் சிறப்புகள் என்ன? தற்போது புழக்கத்தில் உள்ள காகித நோட்டுகளை விட பாலிமர் நோட்டுகள் 4 முதல் 5 மடங்கு அதிக காலம் (பல ஆண்டுகள்) உழைக்கும். இவை எளிதில் கிழியாது, தண்ணீர், எண்ணெய், அழுக்கு போன்றவற்றால் பாதிக்கப்படாது. காகித நோட்டுகள் விரைவில் அழுக்கடைந்து பாக்டீரியாக்களை பரப்பும் அபாயம் உள்ள நிலையில், பாலிமர் நோட்டுகள் ஈரப்பதம் மற்றும் நுண்ணுயிரிகளை உறிஞ்சாது. இதனால் சுகாதாரமான பணப் புழக்கத்தை உறுதி செய்யும்.
இதையும் படிங்க: இன்னும் ரூ.2000 நோட்டு கையில இருக்கா..?? ரிசர்வ் வங்கி சொன்ன முக்கிய தகவல்..!!
பொருளாதார ரீதியாகவும் பெரும் பலன். ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பழைய காகித நோட்டுகளை அழித்து புதியவற்றை அச்சிட ஆர்பிஐ செலவிடும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு கணிசமாகக் குறையும். மேலும், வெளிப்படையான விண்டோ, உலோக எண்கள், காந்த இழை உள்ளிட்ட அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்படுவதால் கள்ள நோட்டு தயாரிப்பு மிகவும் கடினமாகிவிடும்.
கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள்: நாட்டின் பாதுகாப்பை மனதில் கொண்டு, டெண்டரில் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் எந்த வணிகத் தொடர்பும் இல்லாத நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க முடியும். அந்த நாடுகளில் இருந்து மூலப்பொருட்கள் பெறவோ, அங்கு பணியாற்றிய ஊழியர்களை பணியமர்த்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய நோட்டுகள் அறிமுகமான உடனே பழைய காகித நோட்டுகள் செல்லாததாகிவிடாது. இரண்டும் சில காலம் இணைந்து புழக்கத்தில் இருக்கும்.
சோதனை ஓட்டத்தின் வெற்றி, பொதுமக்களின் வரவேற்பு மற்றும் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளைப் பொறுத்து 2027-க்குப் பிறகு படிப்படியாக அனைத்து மதிப்புகளிலும் பாலிமர் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட உலகின் 50க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கனவே இந்த பாலிமர் கரன்சி முறையை வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருகின்றன. இந்த மாற்றம் இந்தியப் பொருளாதாரத்தின் நவீனமயமாக்கலுக்கு முக்கிய படியாக அமையும்.
இதையும் படிங்க: மறந்து போன வங்கி டெபாசிட் இனி வீணாகாது..!! ரிசர்வ் வங்கி சிறப்பு ஏற்பாடு..!!