×
 

பிரதமராக பதவியேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு!! நேருவை நெருங்கும் நரேந்திர மோடியின் சாதனை!!

நாட்டின் பிரதமராக பிரதமர் மோடி பொறுப்பேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு பெற்றது. நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி 2வது இடத்தில் இருக்கிறார்.

புதுடெல்லி: இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்தச் சாதனையை முன்னிட்டு பல தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர்கள் பட்டியலில் மோடி 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

முதல் இடத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு 16 ஆண்டுகள் 286 நாட்கள் பதவி வகித்த சாதனையை இன்னும் முறியடிக்கவில்லை. ஆனால் 2025-ல் இந்திரா காந்தியின் 4,077 நாட்கள் தொடர் பதவிக் காலத்தை மோடி முறியடித்து இரண்டாவது இடத்தை உறுதிப்படுத்தினார். 2014 மே 26 அன்று பிரதமராகப் பதவியேற்ற மோடி, 2019 மற்றும் 2024 தேர்தல்களிலும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பொறுப்பில் இருக்கிறார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த நிறைவு தினத்தில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். தனது சமூக ஊடகப் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “மே 26, 2014 அன்று இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது. பிரதமர் மோடியின் தலைமையில் நிர்வாகம், தேசிய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, டிஜிட்டல் இந்தியா, உள்கட்டமைப்பு மேம்பாடு, தற்சார்பு இந்தியா உள்ளிட்ட பல துறைகளில் நாடு முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் முன்னேறியுள்ளது” என்று குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் பயணம்! உலக நாடுகள் இணைய விரும்புவதாக பிரதமர் மோடி பெருமிதம்!

மேலும், “இன்று இந்தியா முன்பை விட வலிமையான, தன்னம்பிக்கை மிக்க மற்றும் பெருமைமிக்க தேசமாக உருவெடுத்துள்ளது. விளிம்புநிலை மக்கள் பல லட்சக்கணக்கானோர் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்பாளர்களாக மாறியுள்ளனர். தாய்நாட்டுக்காக தனது வாழ்வின் ஒவ்வொரு நாளையும் அர்ப்பணித்துள்ள மோடியின் அயராத உழைப்பும், உறுதியும் இளைஞர்களுக்கு உத்வேகமாக இருக்கிறது” என்று ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினார்.

பிரதமர் மோடியின் 12 ஆண்டு கால ஆட்சியில் ‘மேக் இன் இந்தியா’, ஜன்தன், ஆயுஷ்மான் பாரத், சொகுசு ரயில்கள், விமான நிலையங்கள் விரிவாக்கம், தேசிய நெடுஞ்சாலைகள், டிஜிட்டல் பணம் செலுத்தல், வீடு, கழிப்பிடம், மின்சாரம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட திட்டங்கள் மக்களை நேரடியாகச் சென்றடைந்துள்ளன. குஜராத் முதலமைச்சராக 2002, 2007, 2012 ஆகிய ஆண்டுகளிலும், பிரதமராக 2014, 2019, 2024 தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற சாதனையும் மோடிக்கு உண்டு.

இந்த 12 ஆண்டு பயணம் இந்திய அரசியலில் ஒரு முக்கிய மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது. மக்கள் மத்தியில் மோடியின் செல்வாக்கு மற்றும் நம்பிக்கை இன்னும் உயர்ந்து கொண்டே இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: டெல்லி வந்தார் அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ! பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share