×
 

மேற்காசிய போர் முதல் ஹைட்ரஜன் ரயில் வரை... "இந்தியா சவால்களை சமாளிக்கிறது" என மோடி பெருமிதம்!

மேற்காசிய போரின்போது இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. பல சவால்களுக்கும் இந்தியா பதில் அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஹரியானா மாநிலம் ஜிந்த் நகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை தொடக்கம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து முக்கிய கருத்துகளை தெரிவித்தார்.

வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, ஜிந்த் பகுதி வரலாறு, வீரம் மற்றும் பெருமை நிறைந்த மண் என குறிப்பிட்டார். இந்திய ரயில்வேயின் வளர்ச்சியை எடுத்துக்காட்டிய அவர், 20-ம் நூற்றாண்டு டீசல் மற்றும் மின்சார ரயில்களின் காலமாக இருந்த நிலையில், 21-ம் நூற்றாண்டு ஹைட்ரஜன் தொழில்நுட்ப ரயில்களின் காலமாக மாறி வருவதாக தெரிவித்தார்.

ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் சேவை இந்தியாவின் போக்குவரத்து துறையில் புதிய மைல்கல்லாக இருக்கும் என்றும் பிரதமர் கூறினார். டீசல் எரிபொருளை அதிகம் சார்ந்திருந்த நிலை தற்போது மாறி வருவதாகவும், இந்திய ரயில்வேயின் பெரும்பாலான வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை! கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி! பிரமாண்டம்!

மேற்காசியாவில் ஏற்பட்ட போர் சூழலின்போதும் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்று தெரிவித்த பிரதமர், எரிசக்தி பாதுகாப்பில் நாடு பல்வேறு சவால்களை சமாளித்து வருவதாக கூறினார். டீசலை மட்டும் சார்ந்திருந்தால் இதுபோன்ற சூழ்நிலைகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

உலக அளவில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில்களை இயக்கும் திறன் கொண்ட நாடுகள் குறைவாக உள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட இந்த ரயில் முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது இந்தியாவின் ரயில்வே மற்றும் தொழில்நுட்ப துறையின் வளர்ந்து வரும் திறனை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

மேலும், சமீபத்தில் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கான தனது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியதாக பிரதமர் தெரிவித்தார். அந்த பயணங்களில் பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், குறிப்பாக விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறினார்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துடன் விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி, விளையாட்டு கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்பட உள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இது ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.

ஹைட்ரஜன் ரயில் சேவை தொடக்கம் மற்றும் இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றம் தொடர்பான பிரதமரின் பேச்சு, ரயில்வே மற்றும் எரிசக்தி துறையில் நாட்டின் எதிர்கால திட்டங்கள் குறித்து கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா பயணம் ஓவர்!! நியூசிலாந்து சென்றடைந்தார் பிரதமர் மோடி! ஆரத்தழுவி வரவேற்பு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share