'போதை சில நிமிட மகிழ்ச்சி தரும்... ஆனால் வாழ்க்கையையே அழித்துவிடும்' - இளைஞர்களுக்கு பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை!
போதைப்பொருள் பயன்பாடு சில நிமிட மகிழ்ச்சியை மட்டுமே தரும், ஆனால் எதிர்கால வாழ்க்கையை முழுமையாக பாதிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார். புதிய போதைப்பொருள் தடுப்பு இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
போதைப்பொருள் பயன்பாடு குறித்து இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். சில நிமிடங்களுக்கு மட்டுமே மகிழ்ச்சியை தரும் போதைப்பொருள், ஒருவரின் எதிர்காலத்தையும் குடும்ப வாழ்க்கையையும் முழுமையாக சீரழிக்கக் கூடும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில் புதிய தேசிய விழிப்புணர்வு இயக்கத்தையும் தொடங்கி வைத்தார்.
டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக 'நஷா முக்த் யுவா – விக்சித் பாரத் சங்கல்ப் அபியான்' என்ற நாடு தழுவிய போதைப்பொருள் தடுப்பு இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், 2047-க்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய, இளைஞர்கள் உடல் மற்றும் மனநலத்தில் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம் என்றார். அதற்கு அனைத்து வகையான போதைப்பொருட்களிலிருந்தும் இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
எதிரி நாடுகள் இந்திய இளைஞர்களை குறிவைத்து போதைப்பொருள் விநியோகத்தை ஒரு மறைமுக ஆயுதமாக பயன்படுத்த முயற்சிக்கின்றன என்றும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். போதைப்பொருள் சில நிமிடங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், அது ஒருவரின் உழைப்பு, குடும்பம், கல்வி, தொழில் மற்றும் எதிர்காலத்தை நிரந்தரமாக பாதிக்கும் என்று அவர் எச்சரித்தார்.
இதையும் படிங்க: "என்னையும் என் தாயையும் இழிவாக பேசினார்கள்... ஆனாலும் மன்னிக்கிறேன்!" – பிரதமர் மோடி உருக்கம்!
போதைப்பழக்கத்திலிருந்து மீண்டு வருபவர்களை சமூகம் குற்றவாளிகளாக பார்க்காமல், போராடி வென்றவர்களாக மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். குடும்பத்தினர் சமூக அந்தஸ்துக்காக பிரச்சினையை மறைக்காமல், உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனையை உடனடியாக பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
யோகா, தியானம் மற்றும் சமூகத்தின் ஆதரவு மூலம் போதைப்பழக்கத்திலிருந்து மீண்டு வர முடியும் என்று இந்திய கலாசாரம் கற்றுத்தருகிறது என்றும் பிரதமர் மோடி கூறினார். மேலும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அரசு தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த புதிய இயக்கத்தின் கீழ் அடுத்த 100 வாரங்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாடு முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், மாரத்தான், யோகா, தியானம் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதையும் படிங்க: NEET விவகாரத்தில் களமிறங்கிய அன்னா ஹசாரே!! பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம்! முக்கிய ஆலோசனை!