×
 

விண்வெளித் துறையில் புதிய உச்சத்தை எட்டிய இந்தியா..!! பிரதமர் மோடி பெருமிதம்..!!

இந்திய இளைஞர்களின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளன.

நாட்டின் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது. ஆகஸ்ட் 13 வரை நீடிக்கும் இந்தக் கூட்டத்தொடரில் மத்திய அரசு 6 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. இவற்றில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா குறிப்பிடத்தக்க அரசியல் விவாதங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தொடரில் வெளிநாட்டு நிதி உதவி பெறும் தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்களின் செயல்பாடுகளை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் FCRA திருத்த மசோதா கொண்டுவரப்பட உள்ளது. 

மற்ற மசோதாக்களில் வருமான வரி திருத்தம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, பிறப்பு-இறப்பு பதிவு திருத்தம், தேசிய கௌரவத்துக்கு அவமதிப்பு தடுப்பு (வந்தே மாதரம் பாடலைத் தடுத்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை உள்ளிட்ட கடுமையான ஷரத்துக்கள்) மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அபிவிருத்தி திருத்த மசோதா ஆகியவை அடங்கும்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகளுக்கு ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு வேண்டுகோள் விடுத்தார். “நாடாளுமன்றக் கூட்டத்தொடர் பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அமையும் என நம்புகிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம்” என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொருளாதார ஒத்துழைப்பில் வலுவான பாதை.. புதிய உச்சம் தொட்ட இந்தியா-ஆஸ்திரேலிய உறவு..!!

விண்வெளித் துறையில் இந்தியா சாதித்துள்ள மைல்கற்களைப் பாராட்டிய பிரதமர், “விக்ரம்-1 ராக்கெட் வெற்றியை அடுத்து தனியார் நிறுவன இளைஞர்களுக்கு பாராட்டுகள். இந்திய இளைஞர்களின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளன” என்றார். மேலும், “சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் ரயில் அறிமுகம், 3-வது செமிகண்டக்டர் ஆலை அமைவு உள்ளிட்ட திட்டங்கள் நாட்டின் முன்னேற்றத்தை உறுதி செய்யும். உலகில் எந்தப் போரும் இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது” என அவர் வலியுறுத்தினார்.

“இது இளைஞர்களின் காலம். 56 வயதில் தங்களை இளைஞர் என்று அழைத்துக்கொள்பவர்களுக்கான காலம் இல்லை” என மறைமுகமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்த பிரதமர், நாட்டின் எதிர்காலம் இளைஞர் சக்தியின் கையில் இருப்பதாக உறுதிப்படுத்தினார்.

எதிர்க்கட்சிகள் தரப்பில் மசோதாக்கள் குறித்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடும் விவாதங்களுக்கு வழிவகுக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அரசியல் ஸ்திரத்தன்மைக்கும், முக்கிய சீர்திருத்தங்களுக்கும் இந்த அமர்வு முக்கியமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: இந்தோனேசியா சிவன் கோயிலில் பிரதமர் மோடி..!! சிறப்பு வழிபாடு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share