புட்டபர்த்தியில் கிடைத்த அனுபவம்!! ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா! பிரதமர் மோடி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!!
ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவில் அவரது வாழ்க்கை, போதனைகள் மற்றும் பாரம்பரியத்தை கவுரவிக்கும் விதமாக நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழா புட்டபர்த்தியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பாபாவின் வாழ்க்கையையும் போதனைகளையும் கவுரவிக்கும் வகையில் 100 ரூபாய் நினைவு நாணயமும், சிறப்பு தபால் தலையும் வெளியிட்டார். மேலும், 20,000 பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக சுகன்யா சம்ருத்தி யோஜனா திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உட்பட பல அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் புட்டபர்த்தியில் திரண்டிருந்தனர்.
பிரதமர் மோடி மேடையில் பேசிய போது, “புட்டபர்த்தி புனித பூமி. இங்கு வந்தால் ஆன்மிக அமைதி கிடைக்கிறது. சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழா நமக்கு மிகப் பெரிய வரம். அவரது அருளுரைகள் இன்றும் கோடிக்கணக்கான மக்களை வழி நடத்துகின்றன. 140 நாடுகளில் உள்ள பக்தர்களுக்கு அவர் வெளிச்சமாக இருக்கிறார்” என்றார்.
இதையும் படிங்க: Sorry சொல்லுங்க ராகுல்!! இல்லையினா பிரசாரமே பண்ண முடியாது! காங்கிரஸுக்கு எதிராக பாஜக போர்க்கொடி!
பாபாவின் “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்ற கொள்கையை நினைவு கூர்ந்த மோடி, கல்வி, மருத்துவம், குடிநீர், கிராம மேம்பாடு ஆகிய துறைகளில் சத்ய சாய் அறக்கட்டளை செய்து வரும் சேவைகளைப் பாராட்டினார். “புட்டபர்த்தியில் உள்ள மருத்துவமனையில் பணம் செலுத்தும் கவுன்டரே இல்லை. எல்லோருக்கும் இலவச சிகிச்சை. ராயலசீமாவில் 3,000 கி.மீ குழாய் அமைத்து குடிநீர் கொடுத்தார்கள். இது சாதாரண விஷயம் அல்ல” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து, “எல்லோரையும் நேசியுங்கள், யாரையும் மனது நோவ வைக்காதீர்கள்” என்பது பாபாவின் மிக முக்கியமான போதனை என்றும், ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க பல சேவைகள் செய்தவர் பாபா என்றும் பிரதமர் கூறினார்.
சுகன்யா சம்ருத்தி திட்டம் பற்றி பேசிய மோடி, “10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இத்திட்டத்தால் இன்று 4 கோடிக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் பயன் பெறுகின்றனர். இன்று இங்கு 20,000 பெண் குழந்தைகளுக்கு இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தோம்” என்றார்.
மேலும், “வளர்ச்சி அடைந்த இந்தியா” என்ற இலக்கை அடைய உள்நாட்டுப் பொருள்களை ஆதரிப்போம், சுயசார்பு இந்தியாவை வலுப்படுத்துவோம் என்று மோடி வேண்டுகோள் விடுத்தார். நிகழ்ச்சியில் 100 பசு மாடுகளும் ஏழை விவசாயிகளுக்கு தானமாக வழங்கப்பட்டன.
விழாவின் முடிவில் அனைத்து பக்தர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர் மோடி, சத்ய சாய்பாபாவின் அருளால் அன்பு, சாந்தி, சேவை நிறைந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க: பட்டப் பகலில் மாணவி கொலை... ஒவ்வொரு நிமிஷமும் திக் திக்குனு இருக்கு... EPS ஆவேசம்..!