இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்!! ஜோர்டன் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!
ஜோர்டான் நாட்டின் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக டிசம்பர் 15-ஆம் தேதி ஜோர்டான் தலைநகர் அம்மானுக்கு சென்றடைந்தார். ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனின் சிறப்பு அழைப்பை ஏற்று அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்தியா - ஜோர்டான் உறவு 75 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில் இந்தப் பயணம் மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 16-ஆம் தேதி (இன்று) இந்தியா - ஜோர்டான் தொழில்முனைவோர் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஜோர்டான் நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். அவர் பேசுகையில், “இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்க உள்ளது.
இந்த வளர்ச்சிப் பயணத்தில் ஜோர்டான் நிறுவனங்களும் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன. இந்தியா - ஜோர்டான் உறவு வரலாற்று ரீதியான நம்பிக்கை மற்றும் எதிர்கால பொருளாதார வாய்ப்புகளை ஒன்றிணைத்து உருவானது” என்று கூறினார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு ராஜமரியாதை! ஜோர்டான் மன்னருடன் ஒரே காரில் பயணம்!
மேலும், “ஜோர்டானில் உள்ள இந்திய நிறுவனங்கள் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க முடியும். இதனால் ஜோர்டான் மக்கள் பயனடைவார்கள். ஜோர்டான் மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு நம்பகமான மருந்து விநியோக மையமாக உருவாக முடியும். இரு நாடுகளும் இணைந்து புதிய தொழில்நுட்பங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உள்கட்டமைப்பு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தலாம்” என்றும் அவர் தெரிவித்தார்.
இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இவை வர்த்தகம், மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கியவை. ஜோர்டான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி எத்தியோப்பியா மற்றும் ஓமன் நாடுகளுக்கும் செல்ல உள்ளார். இந்த மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வலுப்படுத்துவதுடன், பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
ஜோர்டான் மன்னருடனான சந்திப்பில் பயங்கரவாத எதிர்ப்பு, பிராந்திய அமைதி உள்ளிட்ட விவகாரங்களும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு ராஜமரியாதை! ஜோர்டான் மன்னருடன் ஒரே காரில் பயணம்!