ஹலோ நெதன்யாகு!! போர் நிறுத்தம் உடனே வேணும்!! இஸ்ரேல் பிரதமரிடம் மோடி போனில் வலியுறுத்தல்!
மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.
மத்திய கிழக்கு (மேற்காசியா) தற்போது மிகுந்த போர் பதற்றத்தில் உள்ளது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது பெரிய தாக்குதல்களை நடத்தின. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீதும், அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), பஹ்ரைன் போன்ற நாடுகள் மீதும் ஏவுகணை, டிரோன் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் பிராந்தியம் முழுவதும் பதற்றம் உச்சத்தில் உள்ளது. யுஏஇயில் மட்டும் இந்த தாக்குதல்களால் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளன.
இந்த சூழலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி விரைவாக செயல்பட்டு இரு முக்கிய தலைவர்களுடன் தொலைபேசியில் பேசினார். முதலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசினார். இந்த உரையாடலில், சமீபத்திய தாக்குதல்கள் குறித்து இந்தியாவின் கவலையை தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொடங்கியது நீங்கள்தான்! முடிவு உங்கள்கையில் இல்லை!! இஸ்ரேல், அமெரிக்காவை எச்சரித்து ஈரான் பதில் தாக்குதல்!
பொதுமக்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். போரை விரைவில் நிறுத்த வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார். "இந்தியா சமீப நிகழ்வுகள் குறித்து கவலை தெரிவித்தது. பொதுமக்கள் பாதுகாப்பு முன்னுரிமை. போரை விரைவில் நிறுத்த வேண்டும்" என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடனும் பேசினார். யுஏஇ மீதான தாக்குதல்களை கடுமையாக கண்டித்தார். தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்தார்.
"யுஏஇயில் வாழும் இந்திய சமூகத்தை கவனித்துக்கொண்டதற்கு நன்றி. இந்தியா யுஏஇக்கு ஆதரவாக உள்ளது. பதற்றத்தை குறைத்தல், பிராந்திய அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை ஆதரிக்கிறோம்" என்று மோடி தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வசிக்கின்றனர். குறிப்பாக யுஏஇ, சவுதி அரேபியா போன்ற நாடுகளில் பல இந்திய குடும்பங்கள் உள்ளன. போர் தீவிரமடைந்தால் அவர்களின் பாதுகாப்பு மிக முக்கியம். இதனால் பிரதமர் மோடியின் இந்த இரு உரையாடல்களும் இந்தியர்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றன. இந்தியா அமைதி, உரையாடல் மூலம் தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த நடவடிக்கைகள் மூலம் இந்தியா பிராந்தியத்தில் சமநிலையான அணுகுமுறையை காட்டுகிறது. போர் தொடர்ந்தால் இந்தியர்களை பாதுகாப்பாக திரும்ப அழைத்து வருவதற்கான திட்டங்களும் தயாராக உள்ளன.
இதையும் படிங்க: Not satisfactory! ஈரானுடனான பேச்சுவார்த்தை மகிழ்ச்சி அளிக்கவில்லை! அமெரிக்க அதிபர் டிரம்ப் விரக்தி!