77வது குடியரசு தினம்!! இன்று மக்களிடையே உரையாற்றுகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!
இந்தியாவின் குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இன்று ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 77வது குடியரசு தினம் நாளை ஜனவரி 26-ஆம் தேதி பெருமையுடன் கொண்டாடப்பட உள்ளது. இந்த புனிதமான நிகழ்வை முன்னிட்டு, இன்று (ஜனவரி 25) ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த உரை மாலை 7 மணிக்கு தொடங்கி நாடு முழுவதும் ஒலிபரப்பப்படவுள்ளது.
ஆகாசவாணியின் தேசிய வலையமைப்பு முழுவதிலும் இந்த உரை நேரலையாக ஒலிபரப்பப்படும். அதேநேரம், தூர்தர்ஷனின் அனைத்து சேனல்களிலும் முதலில் இந்தியில் ஒளிபரப்பப்பட்டு, அதைத் தொடர்ந்து ஆங்கில மொழிபெயர்ப்பு ஒளிபரப்பாகும்.
பின்னர், தூர்தர்ஷனின் பிராந்திய சேனல்கள் மூலம் தமிழ் உள்ளிட்ட பல்வேறு பிராந்திய மொழிகளில் ஜனாதிபதியின் உரை மக்களை சென்றடையும் வகையில் ஒளிபரப்பப்படும். இதன்மூலம், நாட்டின் பன்முகத்தன்மையை மதித்து, அனைத்து மொழி பேசும் மக்களும் ஜனாதிபதியின் செய்தியை நேரடியாகக் கேட்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
இதையும் படிங்க: ஹை அலர்ட்டில் சென்னை! ட்ரோன்கள் பறக்க தடை! 60 நாட்கள் தடை உத்தரவை நீட்டித்த காவல்துறை!!
குடியரசு தினத்தின் முன்னதியாக ஜனாதிபதி ஆற்றும் இந்த உரை, இந்தியாவின் ஜனநாயக பயணம், சுதந்திரத்திற்குப் பிந்தைய வளர்ச்சி, அரசியல் சாசனத்தின் மதிப்பு, நாட்டின் ஒற்றுமை, பொருளாதார முன்னேற்றம், சமூக நீதி, பெண்கள் முன்னேற்றம், இளைஞர்களின் பங்கு உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை எடுத்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டுகளில் திரவுபதி முர்மு ஆற்றிய உரைகள், நாட்டின் வளர்ச்சி, சவால்களை எதிர்கொள்ளும் உறுதி, ஒருமைப்பாடு ஆகியவற்றை வலியுறுத்தி வந்துள்ளன. இந்த ஆண்டும், நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், எதிர்கால இலக்குகள் மற்றும் வெற்றிகரமான இந்தியாவின் பார்வையை அவர் பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது.
நாளை குடியரசு தின அணிவகுப்பு, கலாச்சார நிகழ்ச்சிகள், வீரர்களுக்கு விருதுகள் வழங்கல் போன்றவை நடைபெறும் நிலையில், இன்றைய உரை மக்களுக்கு கொண்டாட்டத்தின் முன்னோட்டமாக அமையும். ஜனாதிபதியின் உரையை கேட்டு, நாட்டின் அரசியல் சாசனத்தின் மீதான பெருமிதத்தை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ள இது சிறந்த வாய்ப்பாக அமையும்.
அனைத்து இந்தியர்களும் மாலை 7 மணிக்கு தங்கள் ரேடியோ அல்லது டிவியை இணைத்து, ஜனாதிபதியின் உரையைக் கேட்டு பெருமைப்படுவோம்.
இதையும் படிங்க: டார்கெட் ‘26–26’! இந்தியாவில் புகுந்து தாக்க பாக்., பயங்கரவாதிகள் சதி!! குடியரசு தினத்தில் பகீர்! ஹை அலர்ட்!