சூடுபிடிக்கும் அரசியல் ஆட்டம்.. ஜனாதிபதி எழுப்பும் 14 கேள்விகள்..! ஆளுநர் ரவி டெல்லிக்கு திடீர் பயணம்..!
மசோதாக்கள் மீது தான் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என உச்சநீதிமன்றத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆலோசனை கோரியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு இருந்தார். இந்த நிலையில் ஆளுநர் ரவி மசோதாக்களை நிலுவையில் வைத்திருந்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அமர்வு ஏப்ரல் 8 ஆம் தேதி தீர்ப்பளித்தது.
அப்போது மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் எனக் கூறிய நீதிபதிகள், குடியரசுத் தலைவருக்கு மசோதாக்கள் அனுப்பியதை ரத்து செய்தும், சட்டப்பிரிவு 142-ன் கீழ் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தியும் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தனர். ஆளுநர் மட்டுமின்றி குடியரசு தலைவர் முடிவெடுக்கவும் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டது.
மசோதா விஷயத்தில் முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு உச்ச நீதிமன்றம் இது போல் காலக்கெடு நிர்ணயித்தது, இதுவே முதல் முறை. இந்த விவகாரம் தொடர்பாக, இன்று (மே 15) உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கருத்தை பெறும் வகையில் 14 கேள்விகளை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு எழுப்பினார்.
இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூரின் முக்கிய டிடெய்ல்ஸ்.. ஜனாதிபதியிடம் விளக்கிய முப்படை தளபதிகள்..!
சட்டம் தொடர்பான சந்தேகங்கள் எழும்போது, உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143-ன் கீழ், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளை முன்வைத்துள்ளார். அதில், மசோதாக்கள் மீது முடிவெடுக்க, குடியரசு தலைவர் மற்றும் ஆளுநருக்கு அரசியலமைப்பு சட்டப்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அனைத்து வாய்ப்புகளுக்கும் ஒரே அளவிலான காலக்கெடுவை நிர்ணயிக்க முடியுமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
1. ஒரு மசோதாவைப் பெற்றவுடன் பிரிவு 200 இன் கீழ் ஒரு ஆளுநருக்குக் கிடைக்கும் அரசியலமைப்புத் தேர்வுகள் என்ன?
2. அத்தகைய மசோதாக்களைக் கையாளும் போது ஆளுநர் அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் மட்டுமே செயல்பட வேண்டுமா?
3. பிரிவு 200 இன் கீழ் ஆளுநரின் விருப்புரிமை நீதித்துறை ஆய்வுக்கு உட்பட்டதா?
4. பிரிவு 361, பிரிவு 200 இன் கீழ் ஆளுநரின் முடிவுகளை நீதிமன்ற மறுஆய்விலிருந்து முழுமையாகப் பாதுகாக்கிறதா?
5. அரசியலமைப்பில் வெளிப்படையான காலக்கெடு இல்லாத நிலையில், மசோதாக்கள் மீது செயல்பட ஆளுநர்களுக்கு நீதித்துறை கால வரம்புகளை விதிக்க முடியுமா?
6. பிரிவு 201 இன் கீழ் ஜனாதிபதியின் விருப்புரிமையை நீதித்துறை ரீதியாக மதிப்பாய்வு செய்ய முடியுமா?
7. அரசியலமைப்பு ஆணைகள் இல்லாத நிலையில், நீதித்துறையால் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு ஜனாதிபதி கட்டுப்படுகிறாரா?
8. ஒரு மசோதா ஆளுநரால் ஒதுக்கப்படும்போது, பிரிவு 143 இன் கீழ் ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்தின் கருத்தை அவசியம் பெற வேண்டுமா?
9. ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு ஆளுநர் அல்லது ஜனாதிபதியின் முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியுமா?
10. பிரிவு 142 இன் கீழ் ஜனாதிபதி அல்லது ஆளுநரின் முடிவுகளை மீறவோ அல்லது மாற்றவோ அனுமதிக்கப்படுமா?
11. ஒரு மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாக மாறுமா?
12. அரசியலமைப்பு விளக்கக் கேள்விகள் முதலில் பிரிவு 145(3) இன் கீழ் அரசியலமைப்பு பெஞ்சிற்கு பரிந்துரைக்கப்பட வேண்டுமா?
13. பிரிவு 142, நடைமுறை விஷயங்களுக்கு அப்பால், ஏற்கனவே உள்ள சட்டங்கள் அல்லது அரசியலமைப்பு விதிகளுக்கு முரணான தீர்ப்புகளை அனுமதிக்கிறதா?
14. மத்திய-மாநில தகராறுகளை உச்சநீதிமன்றத்திற்கு பிரத்யேக அதிகார வரம்பை வழங்கும் அரசியலமைப்பு பிரிவு 131க்கு வெளியே தீர்க்க முடியுமா?
இவ்வாறு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கேள்வி எழுப்பி உள்ளார். இதில் மிக முக்கியமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் தொடர்பு படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இன்று காலை 6.50 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அவருடன் ஆளுநரின் தனி செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றுள்ளனர். பிரதமர் அலுவலகம் அழைத்ததின் பேரில் கவர்னர் டெல்லிக்கு சென்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி, உள்துறை மந்திரி அமித்ஷா, சட்ட நிபுணர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கவர்னர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு விதித்த நிலையில், இன்று சுப்ரீம் கோர்ட்டிடம் ஆலோசனை கருத்தை பெறும் வகையில் 14 கேள்விகளை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போர் நிறுத்தம் வருமா? உக்ரைன் - ரஷ்யா இன்று பேச்சுவார்த்தை.. ஜெலான்ஸ்கி ஆஜர்.. புடின் ஆப்சென்ட்..!