ஆப்ரேஷன் சிந்தூரின் முக்கிய டிடெய்ல்ஸ்.. ஜனாதிபதியிடம் விளக்கிய முப்படை தளபதிகள்..!
டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை அவரது இல்லத்தில் முப்படை தளபதிகள் மற்றும் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் சந்தித்து பேசினர்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாக்., பயங்கரவாதிகள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியாகினர். பயங்கரவாதிகளுக்கு பதில் அடி தரும் வகையில், இம்மாதம் 6ம் தேதி நள்ளிரவு, ஆபரேஷன் சிந்துார் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு - காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை இந்திய படைகள் தாக்கி அழித்தன.இந்தியா நடத்திய வான்வழி தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட 9 பயங்கரவாத முகாம்கள் உருக்குலைந்தன.
இந்திய தாக்குதலில் பலியான பயங்கரவாதிகளை தியாகிகள் போல் சித்தரித்த பாகிஸ்தான், அவர்களின் உடல்களுக்கு அரசு மரியாதை அளித்தது. அத்துடன் நில்லாமல், இந்திய எல்லையில் பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதலை துவங்கியது. ஜம்மு - காஷ்மீரில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைத்து தாக்கிய பாக்., ராணுவத்திற்கு இந்தியாவின் சார்பில் தக்க பதிலடி தரப்பட்டது. ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை நோக்கி, பாக்., ராணுவம் ட்ரோன்களை ஏவி தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டது.
இதையும் படிங்க: அதிர்ச்சி பின்னணி.. ராணுவ அதிகாரியின் தந்தை தீவிரவாதியா? பயங்கரவாதிகளுடன் ஒட்டி உறவாடும் பாக்.,?
பாக்., அனுப்பிய அனைத்து ட்ரோன்களையும் இந்தியா தரையிறங்க விடாமல் தாக்கி அழித்தது. அந்த வகையில், 400க்கும் மேற்பட்ட ட்ரோன்களை அழித்ததாக இந்திய ராணுவம் தெரிவித்தது. தொடர் தாக்குதலில் ஈடுபட்டதால், பாகிஸ்தானின் வான் தாக்குதல் தடுப்பு ரேடாரை, இந்திய விமானப்படை தாக்கி அழித்தது. இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத பாகிஸ்தான், பஞ்சாப் மற்றும் காஷ்மீரில் வழிபாட்டு தலங்களை குறிவைத்து தாக்கியது.
இதையடுத்து இந்திய தரப்பிலும் தக்க பதில் அடி தப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியதால், உலக அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய தாக்குதலை சமாளிக்க முடியாத பாக்., இந்தியாவின் பல ராணுவ, விமானப்படை மையங்களை அழித்ததாக பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டது. இந்தியாவின் தரப்பில் இது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. எல்லைக்கோட்டை தாண்டாமல், ஏவுகணைகள், ட்ரோன்கள் வாயிலாக இந்தியா நடத்தி முடித்த துல்லிய தாக்குதல், உலக நாடுகளை அசர வைத்தது.
இதற்கிடையே, இந்தியா - பாக்., ஆகிய இரு நாடுகளுடன் இரவு முழுதும் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தை நல்ல பலன் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டு பரபரப்பை கிளப்பினார். இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. இரு நாடுகளின் அறிவார்ந்த செயலை பாராட்டுகிறேன். இரவு முழுதும் அமெரிக்கா நடத்திய சமாதான பேச்சு பலன் அளித்துள்ளது என அதிபர் டிரம்ப் கருத்து பதிவிட்டார்.
அவரது ட்விட் வெளியான சில நிமிடங்களில் இந்தியாவின் தரப்பிலும் சண்டை நிறுத்தம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இரு நாட்டு எல்லையில் நிலவிய போர் பதற்றம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், 'ஆபரேஷன் சிந்தூர்' திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, டில்லியில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவரது இல்லத்தில் முப்படை தளபதிகள் மற்றும் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் சந்தித்து பேசினர்.
ராணுவ தளபதி உபேந்திர திவேதி, விமானப் படைத் தளபதி மார்ஷல், கடற்படைத் தளபதி தினேஷ் திரிபாதி ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து, திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்து எடுத்துரைத்தனர். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பதிலடியை, மகத்தான வெற்றியாக மாற்றிய முப்படையினரை ஜனாதிபதி பாராட்டினார். ஜனாதிபதியை முப்படை தளபதிகள் சந்தித்த புகைப்படத்தை ஜனாதிபதி மாளிகை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
இதையும் படிங்க: பாரத் மாதா கி ஜே! இந்தியாவுக்கு நாங்க இருக்கோம்! நாட்டுக்காக உயிரையே கொடுப்போம்! பஞ்சாபில் திரண்ட இளைஞர்கள்..!