×
 

மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை வாபஸ் பெறுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மணிப்பூரில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வந்த ஜனாதிபதி ஆட்சி இன்று (பிப்ரவரி 4, 2026) முற்றுப்பெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஜனாதிபதி திரௌபதி முர்மு பிறப்பித்த உத்தரவு மூலம், 2025 பிப்ரவரி 13-ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஜனாதிபதி ஆட்சி இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைவதற்கான வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மணிப்பூரில் 2023-ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிய மெய்தேய்-குகி இன மோதல் காரணமாக ஏற்பட்ட கடுமையான வன்முறை, கொலைகள், இடம்பெயர்வுகள் ஆகியவை மாநிலத்தை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தின. இந்நிலையில், அப்போதைய முதலமைச்சர் என். பைரன் சிங் மீது வன்முறையை தூண்டிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இதையும் படிங்க: மணிப்பூர் முதலமைச்சராகிறார் யும்னாம் கேம்சந்த் சிங்! ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வருகிறது!

குறிப்பாக, அவரது குரலில் இருப்பதாகக் கூறப்படும் ஆடியோ கிளிப்புகள் வெளியாகின. இந்த ஆடியோக்களை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஏற்பட்ட அழுத்தம் மற்றும் கட்சிக்குள் எழுந்த கருத்து வேறுபாடுகளால், 2025 பிப்ரவரி 9-ஆம் தேதி பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

அடுத்த நான்கு நாட்களில், பிப்ரவரி 13-ஆம் தேதி மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. இதன்பின்னர், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் மாநிலம் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இடையேயான ஆலோசனைகளுக்குப் பிறகு, யும்னம் கெம்சந்த் சிங் மாநில பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) உறுப்பினர்கள் இதற்கான உரிமை கோரிக்கையை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளனர். இந்த மாற்றம் மணிப்பூரில் நீண்டகாலமாக நிலவும் இனக்கலவர பதற்றத்திற்கு தீர்வு காணும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

ஜனநாயக முறையில் அரசு அமைவதால், மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. இருப்பினும், இன மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதி மீட்பு, மக்களை மீண்டும் குடியமர்த்துதல், சட்டம்-ஒழுங்கு மீட்பு ஆகியவை புதிய அரசுக்கு மிகப்பெரிய சவால்களாக உள்ளன. மணிப்பூர் மக்கள் இந்த அரசியல் மாற்றத்தை வரவேற்று, நீண்டகால அமைதியையும் வளர்ச்சியையும் எதிர்பார்த்துள்ளனர். மத்திய அரசு இந்தப் புதிய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மணிப்பூர் முதலமைச்சராகிறார் யும்னாம் கேம்சந்த் சிங்! ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வருகிறது!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share