ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம்..!! டெல்லி Ex. முதல்வர் அதிஷி உட்பட 700+ பேர் அதிரடி கைது!!
கைது நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தர் அருகே இன்று (வெள்ளிக்கிழமை) பரவலான போராட்டம் நடைபெற்றது. காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) அழைப்பின் பேரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி, இடதுசாரி மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட பல அமைப்புகள் பங்கேற்றன.
போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி, சிபிஎம் தலைவர் பிருந்தா காரத் உள்ளிட்ட 700க்கும் அதிகமானோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை (எஸ்ஐஆர்) தொடர்பான சர்ச்சையே இந்த போராட்டத்திற்கு முக்கிய காரணம். வாக்காளர் பட்டியலில் பெருமளவில் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், இது ஆளும் கட்சிக்கு சாதகமாக அமைந்திருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில், தேர்தல் ஆணையர்கள் இருவர் ஞானேஷ் குமாரின் முடிவுகளுக்கு எதிராக 14 முறை அதிருப்தி தெரிவித்ததாக வெளியான செய்திகள் நிலைமையை மேலும் சிக்கலாக்கின. அந்த ஆட்சேபனைகளை கண்டுகொள்ளாமல் தன் விருப்பப்படி செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக தீவிர போராட்டத்தை தொடங்கின. சிஜேபி, ஞானேஷ் குமாருக்கு இரண்டு நாள் கால அவகாசம் அளித்து ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியது.
இதையும் படிங்க: ஜனநாயக அடித்தளமே கேள்விக்குறி.! ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்... CPI வீரபாண்டியன் வலியுறுத்தல்..!!
அந்த காலக்கெடு முடிந்த பின்னரும் அவர் பதவி விலகாததால், இன்று ஜந்தர் மந்தரில் போராட்டம் வெடித்தது. ஏஐஎஸ்ஏ, எஸ்எஃப்ஐ, என்எஸ்யூஐ உள்ளிட்ட மாணவர் அமைப்புகளும் ஆம் ஆத்மி கட்சியும் ஆதரவு தெரிவித்தன. காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும் போராட்டக்காரர்கள் கூடியதால், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இணைய சேவைகளும் சில பகுதிகளில் தடை செய்யப்பட்டன. கைது நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதேபோல் மும்பையில் சிவாஜி பூங்காவில் சிஜேபி போராட்டம் அறிவித்திருந்தது. மகாராஷ்டிரா காவல்துறை அனுமதி வழங்காத நிலையிலும், மாலை 4 மணிக்கு கேட் 6 அருகே போராட்டம் நடத்தப்படும் என்றும், கைது செய்தால் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கட்சி தலைவர்கள் அறிவித்துள்ளனர். இளைஞர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.
முன்னதாக நீட், சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சிஜேபி நடத்திய போராட்டம் நாடு முழுவதும் பரவியதை அடுத்து அவர் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை தொடர்பான இந்த சர்ச்சை தொடர்ந்து அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யாவிட்டால் போராட்டம்..! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கை..!!