×
 

உரிமைக்காக போராடும் இளைஞர்கள்.. தேசவிரோதிகள் என முத்திரை குத்தக்கூடாது - அரவிந்த் கெஜ்ரிவால்!!

பிரதமர் உடனடியாக கல்வி அமைச்சரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

படித்த இளைஞர்கள் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்ததாகக் கூறப்பட்ட கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்று வரும் அபிஜீத் திப்கே, “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” என்ற பெயரில் சமூக ஊடக இயக்கத்தை தொடங்கினார். இளைஞர்களின் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் அரசின் கொள்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் குறுகிய காலத்திலேயே சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த இயக்கத்தின் சமூக ஊடகப் பக்கங்களைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்ததைத் தொடர்ந்து, அதன் சில கணக்குகள் முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. எனினும், அதே பெயரில் மீண்டும் தொடங்கப்பட்ட பக்கங்களும் லட்சக்கணக்கான ஆதரவாளர்களை ஈர்த்தன. இதன் பின்னர், நீட் தேர்வு முறைகேடு குற்றச்சாட்டுகள், சி.பி.எஸ்.இ. தேர்வு நடைமுறைகள் மற்றும் கல்வித் துறையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் பல்வேறு குளறுபடிகள் குறித்து இந்த இயக்கம் தீவிரமாக குரல் கொடுக்கத் தொடங்கியது.

கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதிப் போராட்டம் நடத்தப்படும் என இயக்கம் அறிவித்தது. இதற்காக நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டு வருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: எரிசக்தி நெருக்கடியால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடும் பாதிப்பு..!! பிரதமர் மோடி வேதனை..!!

போராட்டத்திற்கு தடை கோரி சில தரப்பினர் நீதிமன்றத்தை அணுகியிருந்த போதிலும், டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது. இதற்கிடையில், போராட்டத்திற்கு தேவையான அனுமதி பெறப்படவில்லை என டெல்லி காவல்துறை தெரிவித்தது. ஆனால், இயக்க நிர்வாகிகள் அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தனர்.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜந்தர் மந்தர் மற்றும் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டனர். அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்த அபிஜீத் திப்கே தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள், வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், இந்த இயக்கத்தின் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்துள்ளார். இளைஞர்களின் கோபம் மற்றும் ஏமாற்றத்தின் வெளிப்பாடாக இந்த இயக்கத்தை பார்க்க வேண்டும் என்றும், அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதே அரசின் கடமையெனவும் அவர் வலியுறுத்தினார். மேலும், அவர்களை தேசவிரோதிகள் என்று முத்திரை குத்துவதற்குப் பதிலாக, மோடி அரசு அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். கல்வித்துறையில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் மீண்டும் முன்வைத்தார். 

இதையும் படிங்க: கல்வி முறையை சீரழித்த பிரதமர் மோடி..!! விலை கொடுக்கிறது இந்திய இளம் தலைமுறை..!! ராகுல் காந்தி சாடல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share