புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதி வண்ண விருது! வரலாற்று சாதனை குறித்து துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பெருமிதம்!
சிறப்பான சேவைக்காக மாநில காவல்துறைகளுக்கு ஜனாதிபதியால் வழங்கப்படும், ஜனாதிபதி வண்ண விருதுக்கு (Nishaan Award) புதுச்சேரி காவல்துறை தேர்வாகியுள்ளதாக துணை நிலை கவர்னர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி காவல்துறையின் அசாத்திய மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய சிறப்பான சேவையைப் பாராட்டும் வகையில், நாட்டின் மிக உயரிய கவுரவமான 'ஜனாதிபதி வண்ண விருது' (President's Colour / Nishaan Award) புதுச்சேரி காவல்துறைக்கு வழங்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பைத் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (Lieutenant Governor) திரு. கே. கைலாஷ்நாதன் அவர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுப் புதுவை மக்களுக்குப் பெருமிதச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் ராணுவப் பிரிவுகள் மற்றும் மாநில/யூனியன் பிரதேச காவல்துறைகளின் மிகச்சிறந்த சேவை, தியாகம், ஒழுக்கம் மற்றும் தொழில்முறைத் திறமைகளை அங்கீகரிக்கும் விதமாக ஜனாதிபதியால் வழங்கப்படும் மிக உயரிய விருது இந்த 'நிஷான்' எனப்படும் ஜனாதிபதி வண்ண விருதாகும்.
இத்தகைய பிரம்மாண்ட கவுரவத்தைப் பெறும் இந்தியாவின் 18-ஆவது காவல்துறை என்ற வரலாற்றுப் பெருமையை இப்போது புதுச்சேரி காவல்துறை தட்டிச் சென்றுள்ளது. சுதந்திரத்திற்குப் பின் மிகச் சில மாநில காவல்துறைகள் மட்டுமே பெற்றுள்ள இந்த எலைட் பட்டியலில், தற்போது புதுச்சேரியும் இணைந்து அசுர சாதனை படைத்துள்ளது.
இதையும் படிங்க: கனிம வளங்கள் மூலம் புதிய தொழில் முதலீடுகள்... முதல்வரை சந்தித்த பின் அமைச்சர் டி.கே. பிரபு உறுதி..!
இதுகுறித்துத் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "புதுச்சேரி காவல்துறையின் மிகச்சிறந்த சட்டம் ஒழுங்குப் பராமரிப்பு மற்றும் பொதுமக்களுக்கான நேர்மையான சேவைக்குக் கிடைத்துள்ள மாபெரும் அங்கீகாரம் இதுவாகும்.
இந்த விருது புதுச்சேரி காவல்துறையின் ஒட்டுமொத்தப் பெருமையையும், பொறுப்பையும் சர்வதேச அளவில் உயர்த்தியுள்ளது" என்று பாராட்டியுள்ளார். இந்த 'நிஷான்' விருதுக்கான பிரத்யேகக் கொடி மற்றும் சீருடையில் அணியும் சின்னத்தின் (Badge) வடிவமைப்புகளை அண்டமான் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற வடிவமைப்பாளர் ஜெக ஜீவன் ராம் உருவாக்கியுள்ளார் என்பதும், அதற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட விழாவில் இந்த உயரிய விருது புதுச்சேரி காவல்துறைக்கு முறைப்படி வழங்கப்படவுள்ளதால், புதுவை மாநிலமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இதையும் படிங்க: சுகாதாரத்துறை சவால்கள்..? CM விஜய் தலைமையில் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை!