ஐரோப்பாவுடன் மோதலா? உலக நாடுகளுக்கு புடின் சொன்ன முக்கிய செய்தி! ரஷ்யாவின் அடுத்த திட்டம் என்ன?
உலக அளவில் எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் ரஷ்யா தொடர்ந்து பங்களிக்க தயாராக இருப்பதாகவும் புடின் தெரிவித்தார்.
புதுடெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லி வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்யாவின் வெளியுறவுக் கொள்கை, ஐரோப்பிய நாடுகளுடனான உறவு, பிரிக்ஸ் அமைப்பு மற்றும் இந்தியாவுடனான நட்புறவு குறித்து பல்வேறு முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய புடின், ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை என்றும், எதிர்காலத்திலும் அவ்வாறு செயல்படப் போவதில்லை என்றும் கூறினார். ஐரோப்பாவுடன் நேரடி மோதலில் ஈடுபட வேண்டிய அவசியம் ரஷ்யாவுக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலக அளவில் எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் ரஷ்யா தொடர்ந்து பங்களிக்க தயாராக இருப்பதாகவும் புடின் தெரிவித்தார். உலகின் பல்வேறு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற ரஷ்யா தயாராக இருப்பதாக கூறிய அவர், பிரிக்ஸ் கூட்டமைப்பு எந்த ஒரு நாட்டுக்கும் அல்லது குழுவுக்கும் எதிரான அமைப்பு அல்ல என்றும் விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: ஒரே மேடையில் மோடி, புதின், ஜி ஜின்பிங்! இந்தியாவில் ஒன்று கூடும் உலக தலைவர்கள்! பிரதமர் ட்வீட் வைரல்!
இந்தியாவுடனான உறவுக்கும் புடின் முக்கியத்துவம் அளித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்த விரும்புவதாக தெரிவித்த அவர், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட கொள்கையை பின்பற்றி வருவதாக பாராட்டினார்.
மேலும், உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதாக புடின் குறிப்பிட்டார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகவும் அவரது கருத்துகள் வெளிப்படுத்துகின்றன.
இதனிடையே, உலகப் பொருளாதாரத்தில் ஜி7 நாடுகளின் பங்கு கடந்த பல ஆண்டுகளாக குறைந்து வருவதாகவும் ரஷ்ய அதிபர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதாக அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
பிரிக்ஸ் அமைப்பின் எதிர்கால வளர்ச்சி மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தில் அதன் பங்கு குறித்து சர்வதேச அளவில் விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் புடின் தெரிவித்த இந்த கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: இந்தியாவின் உரப் பிரச்னையை தீர்ப்போம்! பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் கொடுத்த முக்கிய உறுதி!