×
 

ஜார்க்கண்ட் மாணவர் போராட்டத்தில் ராகுல் ஓட்டம்! பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண்சுக் ஆவேசம்!

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டங்களை அரசியலாக்க முயன்ற ராகுல் காந்தியும் கேஜ்ரிவாலும் ஜார்க்கண்டில் தலைமறைவாகிவிட்டனர் என தருண்சுக் கூறியுள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை சுய லாபத்திற்காக அரசியல் ரீதியாக மாற்றத் துடித்த ராகுல் காந்தியும், அரவிந்த் கேஜ்ரிவாலும், ஜார்க்கண்டில் மாணவர்கள் திரண்டு போராடிய போது வாய்மூடித் தலைமறைவாகிவிட்டனர் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் தருண்சுக் சரமாரியாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை அடுத்த பல்லாவரத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பேச்சாளர்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு உரையாற்றிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாத இரட்டை வேடத்தை மிகக் கடுமையாகச் சாடினார். 

டெல்லியில் மாணவர் போராட்டத்தை அரசியலாக்க முயன்ற ராகுல் காந்தியும், அரவிந்த் கேஜ்ரிவாலும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட மாணவர் போராட்டத்தின் போது அவர்களின் உரிமைகள் குறித்தோ, அவர்களுக்காக அரசை வலியுறுத்தியோ ஒரு வார்த்தை கூடப் பேசாமல் ஓடி ஒளிந்து கொண்டதன் மூலம் தங்களின் போலி முகத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என விமர்சித்தார்.  

இதையும் படிங்க: அமித் ஷா உடனே பதவி விலக வேண்டும்! ஜந்தர் மந்தர் விவகாரத்தில் ராகுல் காந்தி ஆவேசம்!

தொடர்ந்து பேசிய அவர், பாஜக என்பது தனிநபர்களை மட்டுமே முன்னிறுத்தி இயங்கும் கட்சியல்ல என்றும், வலுவான கொள்கை அடித்தளம் மற்றும் கட்டுக்கோப்பான கட்டமைப்புடன் ஆண்டுக்கு 365 நாட்களும் தொடர்ந்து மக்கள் பணியாற்றும் பேரியக்கம் என்றும் பெருமிதம் தெரிவித்தார். 

கட்சியின் தேசிய ஒருமைப்பாட்டுச் சிந்தனை, வரலாற்றுத் தியாகங்கள் மற்றும் மக்கள் நலப் பணிகளைத் தொண்டர்களுக்கு முறையாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பிரத்யேகப் பயிற்சி முகாம்கள் தொடங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். 

எதிர்வரும் தேர்தல்களில் தமிழகத்தில் பாஜக ஒரு அசைக்க முடியாத பலமான மாற்றுச் சக்தியாக உருவெடுத்துள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி மற்றும் தலைமை மீது தமிழக மக்கள் அளப்பரிய நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆளும் திமுக அரசை எச்சரித்த அவர், தெளிவான தொலைநோக்குப் பார்வையும் கொள்கை உறுதியும் இல்லாமல் வெறும் திரைப்பட பாணி வசனங்களை மட்டுமே பேசி ஓர் அரசாங்கத்தை நடத்திவிட முடியாது என்றார். மக்கள் மன்றத்தில் திரைப்பட நாடகங்களை அரங்கேற்றுவதை விடுத்து ஆக்கப்பூர்வமான களப்பணியில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். 

மேலும், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயக விழுமியங்களை மதிக்காமல் துப்பாக்கி மற்றும் வன்முறையே தீர்வு எனக் கருதும் 'அறிவுசார் நக்சல்கள்' பயங்கரவாதிகளை ஆதரித்துவிட்டுத் தேசியக் கொடியை வைத்து நாடகமாடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், ஜனநாயக விவாதங்கள் மூலமே நாடு முன்னேற முடியும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: எதிர்பாராத திருப்பம்.. ராகுல் காந்திக்கு ஷாக் கொடுத்த திமுகவின் அடுத்த நகர்வு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share