டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை சந்திக்கக் கோரிப் பேரணி சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நேரில் சந்தித்து மனு அளிக்க அனுமதி கோரியும், தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகளைக் கண்டித்தும் தடையை மீறி தேர்தல் ஆணையத் தலைமையகம் நோக்கி பேரணி சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இந்தியா (I.N.D.I.A) கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கானோரை டெல்லி காவல்துறை இன்று அதிரடியாகக் கைது செய்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், வாக்காளர் தீவிர திருத்தப் பணிகளில் (SIR) ஆளும் பாஜகவுக்கு ஆதரவாகச் சட்டவிரோத மாற்றங்கள் செய்யப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகத் தலைமைத் தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து விளக்கம் பெற எதிர்க்கட்சிகள் சார்பில் முறைப்படி அனுமதி கோரப்பட்டது; ஆனால் அனுமதி வழங்கப்படாததைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தின் மகர துவாரத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகமான நிர்வாசன் சதான் நோக்கி இந்தியா கூட்டணிக் கட்சி எம்பிக்கள் பிரம்மாண்ட எதிர்ப்புப் பேரணியைத் தொடங்கினர்.
இதையும் படிங்க: ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம்..!! டெல்லி Ex. முதல்வர் அதிஷி உட்பட 700+ பேர் அதிரடி கைது!!
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் பதாகைகளை ஏந்தியவாறும், தேசியக் கொடியை அசைத்தவாறும் முழக்கங்களை எழுப்பியபடி பேரணியாக முன்னேறினர்.
போராட்டக்காரர்கள் தேர்தல் ஆணைய அலுவலகத்தை நெருங்குவதைத் தடுக்கும் வகையில் பல அடுக்கு இரும்புத் தடுப்புகளை அமைத்து, கலகத் தடுப்புக் காவலர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். தடுப்புகளைத் தாண்டி எம்பிக்கள் முன்னேற முயன்றதால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அப்பகுதியே போர்க்களமாக மாறியது. இதையடுத்து, ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த எம்பிக்களைக் காவல்துறையினர் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று பேருந்துகளில் ஏற்றிப் நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்குப் பலவந்தமாகக் கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளுடன் வெளிப்படையாகப் பேச அஞ்சுகிறது; உண்மை நாட்டு மக்களின் முன் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
எங்கள் போராட்டம் எவ்வித சுயநல அரசியலுக்கானதும் அல்ல; இது இந்திய அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கான அறப்போர்; 'ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு' என்ற ஜனநாயக உரிமையை மீட்டெடுக்கவும், தூய்மையான மற்றும் நேர்மையான வாக்காளர் பட்டியலை உறுதிப்படுத்தவுமே நாங்கள் களத்தில் நிற்கிறோம்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாகக் கைது செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மாசு கட்டுப்பாட்டு சர்டிபிகேட் இல்லையா.. அப்போ 'NO FUEL'..!! டெல்லியில் விதி தீவிர அமல்..!!