×
 

ராகுல் காந்தியின் ஜெர்மனி டூர்!! BMW ஷோருமில் விசிட்! பாஜக விமர்சனம்!

பார்லி கூட்டத் தொடரை புறக்கணித்து விட்டு, ராகுல் ஜெர்மனிக்கு சென்றிருப்பதை பாஜ கடுமையாக விமர்சித்து வருகிறது.

பெர்லின் (ஜெர்மனி): மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டிசம்பர் 15ஆம் தேதி ஜெர்மனி சென்றடைந்தார். டிசம்பர் 20ஆம் தேதி வரை அவர் ஜெர்மனியில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இப்பயணத்தின் முக்கிய நோக்கம் புலம்பெயர்ந்த இந்தியர்களைச் சந்தித்து பேசுவது மற்றும் காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு அமைப்புகளை வலுப்படுத்துவதாகும்.

பெர்லின் நகரில் ராகுல் காந்தி வெளிநாடு வாழ் இந்தியர்களைச் சந்தித்து உரையாடுகிறார். அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், உரிமைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கிறார். மேலும், ஐரோப்பிய நாடுகளில் உள்ள காங்கிரஸ் வெளிநாட்டு அமைப்புகளின் (Overseas Congress) தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். 

அயலக காங்கிரஸில் அதிக உறுப்பினர்களை இணைப்பது, அமைப்பை மேலும் வலுப்படுத்துவது, வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஆதரவைத் திரட்டுவது உள்ளிட்டவை இந்தச் சந்திப்புகளின் முக்கிய நோக்கங்களாக உள்ளன.

இதையும் படிங்க: திமுகவா? தவெகவா? சஸ்பென்ஸ் வைக்கும் ராகுல்காந்தி! தமிழக காங்., குழப்பம்!

இந்நிலையில், டிசம்பர் 17 அன்று ராகுல் காந்தி முனிச் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற BMW கார் உற்பத்தி ஆலையைப் பார்வையிட்டார். அங்கு BMW நிறுவனத்துடன் இணைந்து TVS நிறுவனம் உருவாக்கிய 450 சிசி மோட்டார் சைக்கிளில் ராகுல் காந்தி அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த அழகிய காட்சியின் வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆலையைப் பார்வையிட்ட பிறகு பேசிய ராகுல் காந்தி, “வலுவான பொருளாதாரங்களுக்கு உற்பத்தித் துறைதான் முதுகெலும்பாகத் திகழ்கிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் உற்பத்தித் துறை சரிவைச் சந்தித்து வருகிறது. நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்த வேண்டுமானால், நாம் அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும். பெருமளவில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்” என்று கடுமையாக விமர்சித்தார். இந்தியாவின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை மறைமுகமாக சாடியதாக இது பார்க்கப்படுகிறது.

பாராளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ராகுல் காந்தி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருப்பதை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. பாராளுமன்றப் பணிகளைப் புறக்கணித்துவிட்டு வெளிநாட்டில் சுற்றுவதாக பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு காங்கிரஸ் தரப்பில் இது திட்டமிட்ட பயணம் என்றும், எதிர்க்கட்சித் தலைவராக அவரது பொறுப்புகளை மீறியது அல்ல என்றும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் இந்த ஜெர்மனி பயணம் காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு ஆதரவை வலுப்படுத்தும் முயற்சியாகவும், இந்திய உற்பத்தித் துறை குறித்த அவரது தொடர் விமர்சனங்களின் அங்கமாகவும் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மோடி, அமித்ஷா முகத்தில் அறைந்த தீர்ப்பு! நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து கார்கே மகிழ்ச்சி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share