×
 

தகுதியான தலைவர்களுக்கு வாய்ப்பு கொடுங்க!! மாவட்ட தலைவர்கள் கோரிக்கை!! ராகுல்காந்தி நிராகரிப்பு!

திறமையான, தகுதியான மாவட்டத் தலைவர்களை தேர்வு செய்ய, 'சங்கதன் சிருஜன் அபியான்' திட்டத்தை, காங்கிரஸ் மேலிடம் அறிமுகப் படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மேலிடம் தொடங்கிய ‘சங்கதன் சிருஜன் அபியான்’ திட்டத்தால் தமிழக காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திறமையான மற்றும் தகுதியான மாவட்டத் தலைவர்களைத் தேர்வு செய்யும் நோக்கில், டெல்லியிலிருந்து 38 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, தமிழகத்துக்கு வந்துவிட்டது. 

இந்தக் குழுவில் முன்னாள் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், ராஜஸ்தான், கர்நாடகா போன்ற வெளி மாநிலத் தலைவர்களும் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா மூன்று மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டு, புதிய மாவட்டத் தலைவர்களைத் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.

தமிழக காங்கிரஸில் 77 மாவட்டங்கள் உள்ளன. அதில் 12 மாவட்டத் தலைவர்கள் இறந்து போனதாலோ, ராஜினாமா செய்ததாலோ காலியாக உள்ளன. மேலும் பல இடங்களில் திறமையின்மை இருப்பதாகக் கருதி, ராகுல் காந்தி முழு மாற்றத்தை முடிவு செய்துள்ளார். 

இதையும் படிங்க: அய்யா பாட்டாளி மக்கள் கட்சி!! புதுக்கட்சி துவங்குகிறார் ராமதாஸ்?! சர்ச்சையில் தைலாபுரம்!

இந்தக் குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் தகுதியான மூன்று பேரைத் தேர்வு செய்து, அவர்களை நேரில் சந்தித்துப் பேசி, இறுதிப் பட்டியலைத் தயார் செய்து டெல்லிக்கு அனுப்பும். ஓரிரு நாளில் மாவட்டம் வாரியாக இந்தக் குழு சென்று புதிய தலைவர்களை அறிவிக்கும் என்று தெரிகிறது. இதனால், தற்போதைய மாவட்டத் தலைவர்களில் சரியாக வேலை செய்யாதவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இந்த மாற்றத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “இன்னும் நான்கு மாதங்களில் சட்டசபைத் தேர்தல் வருகிறது. இந்த நேரத்தில் மாவட்டத் தலைவர்களை மாற்றினால் கட்சி அமைப்பு பாதிக்கப்படும். தேர்தல் முடிந்த பிறகு செய்யலாம்” என்று டெல்லி மேலிடத்திடம் வலியுறுத்தினர். 

முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் சமீபத்தில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் இதை வலுவாக எடுத்துச் சொன்னார். ஆனால் ராகுல் காந்தி, “இத்திட்டத்தை இப்போது நிறுத்த முடியாது. தமிழகத்தில் மட்டும் நிறுத்தினால் மற்ற மாநிலங்களிலும் நிறுத்த வேண்டிய நிலை வரும்” என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

குஜராத்தில் இதே திட்டம் வெற்றி பெற்றதால், ராகுல் காந்தி இதை நாடு முழுவதும் செயல்படுத்த உறுதியாக உள்ளார். இந்த மாற்றத்தால் தமிழக காங்கிரஸில் பல பழைய முகங்கள் வெளியேறி, புதிய முகங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்பு இந்தப் பெரிய மாற்றம் கட்சியின் ஒற்றுமையைப் பாதிக்குமா, அல்லது புத்துணர்ச்சி தருமா என்பது விரைவில் தெரியவரும்.

இதையும் படிங்க: இந்தியா தப்பிப்பிழைக்க காரணமே ஹிந்து சமுதாயம்தான்!! இது வலுவான கட்டமைப்பு! மோகன் பகவத் பெருமிதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share