×
 

ஜெய்ப்பூர்: மருத்துவமனை ICU-வில் திடீர் தீ விபத்து.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!!

ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் (எஸ்எம்எஸ்) மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 6 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து நள்ளிரவில் ஏற்பட்டதாகவும், குறுகிய மின்சுற்று (ஷார்ட் சர்க்யூட்) காரணமாக தீ பரவியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கையில், ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் தீயால் ஏற்பட்ட புகையால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். விபத்து நிகழ்ந்தபோது அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சிக்காமல் ஓடிவிட்டதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். "எச்சரிக்கை அறிகுறிகள் இருந்தபோதும் ஊழியர்கள் புறக்கணித்தனர்" என்று உறவினர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர். இதனால் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் இந்த சம்பவம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க: திருவண்ணாமலை: தீபமலையில் தீ விபத்து.. எரிந்து நாசமான மூலிகை செடிகள்..!!

இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் ஐசியூவில் இருந்த நோயாளிகளில் பலருக்கு புகை மூட்டம் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுவிட்டது. உயிரிழந்தவர்களில் மூன்று பெண்கள் உள்ளடங்கியுள்ளனர் என்று சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தீ ஐசியூவின் இரண்டாவது தளத்தில் உள்ள ஸ்டோர் ரூமில் தொடங்கி, அங்கு சேமித்திருந்த காகித கோப்புகள், ஐசியூ உபகரணங்கள், இரத்த பரிசோதனை குழாய்கள் உள்ளிட்டவற்றை சூழ்ந்து, விரைவாக பரவியது. நச்சு புகை முழு வார்ட்டையும் மூடியதால், நோயாளிகள் சுவாசிக்க முடியாமல் தவித்தனர்.

ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா, விபத்து நிகழ்ந்த இடத்திற்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், விபத்துக்கான காரணத்தை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

போலீஸார் சம்பவ இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தியுள்ளனர். விசாரணை அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விபத்து ராஜஸ்தானில் உள்ள மருத்துவமனைகளின் பாதுகாப்பு அமைப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: #BREAKING: கரூரை உலுக்கிய மரண ஓலம்... மனதை ரணமாக்கும் துயரம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share