அத்துமீறினா அவ்ளோ தான்!! சும்மா இருக்க மாட்டோம்! பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் வார்னிங்!!
குஜராத் கடல் எல்லையையொட்டிய, 'சர் க்ரீக்' பகுதியில் ராணுவ உள்கட்ட மைப்புகளை விரிவுப்படுத்தி வரும் பாகிஸ்தானுக்கு, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குஜராத் கடல் எல்லையை ஒட்டிய சர் க்ரீக் பகுதியில் ராணுவ உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்தி வரும் பாகிஸ்தானுக்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "ஏதேனும் அத்துமீறல் முயற்சி செய்தால், வரலாறு மற்றும் புவியியல் மாறும் அளவுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்," என அவர் எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கை, கட்ச் மாவட்டத்தில் உள்ள ராணுவ தளத்தில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில் வெளியிடப்பட்டது.
குஜராத்தின் கட்ச் மற்றும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கு இடையே 96 கி.மீ. நீளமுள்ள கடற்கழி பகுதியே 'சர் க்ரீக்' என அழைக்கப்படுகிறது. இந்தியா, இதன் மையப் பகுதியில் சர்வதேச எல்லை இருப்பதாகக் கூறுகிறது. ஆனால் பாகிஸ்தான், கிழக்கு கரையை ஒட்டி இந்தியாவுக்கு அருகில் எல்லை இருப்பதாக வாதிடுகிறது. சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் கழித்தும், இந்த எல்லைப் பிரச்னை தீர்க்கப்படாமல் தொடர்கிறது. இது மீனவர்கள் பிரச்னை, கடல் வளங்கள் மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான மோதல்களுக்கு வழிவகுக்கிறது.
நேற்று (அக்டோபர் 2) கட்ச் மாவட்டத்தில் உள்ள ராணுவ தளத்தில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். விஜயதசமி விழாவை முன்னிட்டு நடந்த இந்த நிகழ்ச்சியில், 'ஆப்ரேஷன் சிந்தூர்' தாக்குதலின் போது இந்தியாவுக்கு உதவிய ஆயுதங்களுக்கு அவர் பூஜை செய்தார்.
இதையும் படிங்க: அக்னி பிரைம்!! ரயிலில் இருந்து பாயும் ஏவுகணை! மாஸ் காட்டிய இந்தியா..!
இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர், "தேசம் விடுதலை பெற்று 78 ஆண்டுகள் ஆனும், சர் க்ரீக் எல்லைப் பிரச்னை தொடர்கிறது. இந்தியா பலமுறை பேச்சுகளின் மூலம் தீர்வு காண முயன்றது. ஆனால் பாகிஸ்தான் ஒத்துழைக்கவில்லை. அவர்களின் நோக்கம் தெளிவில்லை. சமீபத்தில் சர் க்ரீக் அருகில் உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்தியது அவர்களின் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்துகிறது," எனக் கூறினார்.
மேலும், "நம் ராணுவமும் எல்லைப் பாதுகாப்பு படையும் இணைந்து எல்லைகளைப் பாதுகாக்கின்றன. சர் க்ரீக் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறல் செய்தால், இந்தியா அமைதியாக இருக்காது. வரலாறு மற்றும் புவியியல் மாறும் அளவுக்கு வலுவான பதிலடி தரப்படும். 1965 போரில் லாகூர் வரை நம் ராணுவம் சென்றது. 2025-ல் நம் பலம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. கராச்சி வரையிலான ஒரு பாதை சர் க்ரீக்கு வழியாகவே செல்கிறது என்பதை பாகிஸ்தான் மறக்கக் கூடாது," என அவர் எச்சரித்தார்.
ராஜ்நாத் சிங், 'ஆப்ரேஷன் சிந்தூர்' தாக்குதலை நினைவுகூர்ந்தார். "லே முதல் சர் க்ரீக் வரை இந்தியாவின் பாதுகாப்பை மீற முயன்றது பாகிஸ்தான். ஆனால் நம் படைகள் கொடுத்த தக்க பதிலால் அது தோல்வியடைந்தது. நம் ஆயுதங்கள் பாகிஸ்தானின் வான்பாதுகாப்பை முழுமையாக அழித்தன.
எங்கு, எப்போது, எப்படி வேண்டுமானாலும் பெரும் சேதம் ஏற்படுத்தலாம் என்பதை நம் முப்படைகள் நிரூபித்தன. போரைத் தொடங்குவது நோக்கம் இல்லை; பயங்கரவாதம் மட்டுமே இலக்கு என்பதை நிரூபித்தோம். அந்த நடவடிக்கை முழு வெற்றி பெற்றது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடரும்," என அவர் தெரிவித்தார்.
இந்திய ராணுவத்தின் தற்கால பலம், 1965-ஆம் ஆண்டு போரை விட பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும், பயங்கரவாதம் அல்லது எல்லை மீறல்களுக்கு எதிராக எப்போதும் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார். விழாவில் ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த எச்சரிக்கை, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை மீண்டும் சூடாக்கியுள்ளது. சர் க்ரீக் பிரச்னை, கடல் வளங்கள் மற்றும் தளவாட அமைப்புகளைப் பொறுத்து முக்கியமானது. இந்தியா, பேச்சுகளின் மூலம் தீர்வு கோரியும், பாகிஸ்தானின் உள்கட்டமைப்பு விரிவாக்கம் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ராஜ்நாத் சிங்கின் பேச்சு, இந்திய ராணுவத்தின் தயார்நிலை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதியை வலுப்படுத்துகிறது.
இதையும் படிங்க: 2047 வரை மோடி தான் பிரதமர் வேட்பாளர்! அதுதான் இலக்கு! அடித்து சொல்லும் ராஜ்நாத் சிங்!