இந்த 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தொடரும் கனமழை!
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்றும் (டிசம்பர் 2, 2025) கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வலுவிழந்த 'டிட்வா' புயல் காரணமாகத் தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகராமல் கிட்டத்தட்ட அதே இடத்தில் நிலை கொண்டுள்ளதால், சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்பு நீடிக்கிறது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் இன்று 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தற்போது நகராமல் ஒரே இடத்தில் நிலைகொண்டு உள்ளது. இது சென்னையிலிருந்து கிழக்கே சுமார் 50 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து வடகிழக்கே 140 கி.மீ தொலைவிலும் உள்ளது. தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதி வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையிலிருந்து குறைந்தபட்சம் 35 கி.மீ தூரத்தில் உள்ளது.
எதிர்பார்ப்பு: இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வட தமிழ்நாட்டிற்கு இணையாக வடக்கு நோக்கி மெதுவாக நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை வாக்காளர் நீக்கம்: SIR திருத்தப் பணியால் 10 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு.. மாவட்ட நிர்வாகம் தகவல்!
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டதன் காரணமாக, நேற்று அதிகாலை முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து இடைவிடாது மழை பதிவாகி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில், சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 94.6 மி.மீ மழையும், சென்னை நகரத்தில் 99.5 மி.மீ மழையும், மீனம்பாக்கத்தில் 53.5 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. முதலில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அதிக கனமழை காரணமாக அது ரெட் அலர்ட் எச்சரிக்கையாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது, மழை சற்று மிதமான நிலையில் தொடர்ந்தாலும், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அதே பகுதியில் நிலைக்கொண்டு புதிய மழை மேகங்களை உருவாக்கி வருவதால், இன்று (டிசம்பர் 2, 2025) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் கனமழை பதிவாகக்கூடும் என்பதால் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மழை நீடிக்குமா? அல்லது குறையுமா? என்பது இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் அடுத்தகட்ட நகர்வைப் பொறுத்தே அமையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஒரே நாளில் 7 விமானங்கள் ரத்து.. பயணிகள் கடும் அவதி.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!