குருவாயூர் மற்றும் ராஜராஜேஸ்வரம் கோயில்களுக்கு ஆனந்த் அம்பானி வாரி வழங்கிய நன்கொடை!
குருவாயூரில் யானைகளின் பராமரிப்புக்கு உதவுவதாகவும், கிழக்கு கோபுர மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.12 கோடியை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, கேரளாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்குள்ள கோயில்களின் மேம்பாட்டிற்காகப் பெருந்தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராஜராஜேஸ்வரம் கோயில் மற்றும் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் ஆகிய இரண்டு கோயில்களுக்கும் தலா ரூ.3 கோடி வீதம் மொத்தம் ரூ.6 கோடி நிதியுதவியை ஆனந்த் அம்பானி வழங்கியுள்ளார். இந்தக் காணிக்கை கோயிலின் தினசரி நிர்வாகம் மற்றும் அன்னதானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குருவாயூர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு, கோயில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ஆனந்த் அம்பானி, மேலும் சில முக்கிய மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்துள்ளார்: குருவாயூர் கோயிலுக்குச் சொந்தமான யானைகளைப் பராமரிப்பதற்கான செலவுகளுக்குத் தேவையான முழு உதவியையும் செய்ய முன்வந்துள்ளார். கோயிலின் கிழக்கு கோபுரப் (East Gopuram) பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக மட்டும் தனியாக ரூ.12 கோடி வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அப்பம், ஆம்லெட், புட்டுடன் ஒரு சுவையான மீட்டிங்..!! UDF தலைவர்களுடன் ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை..!!
அம்பானி குடும்பத்தினர் பாரம்பரியமாகவே கேரளா மற்றும் திருப்பதி போன்ற முக்கியக் கோயில்களுக்குத் தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர். ஆனந்த் அம்பானி தனது திருமணத்திற்கு முன்னரும், பின்னரும் பலமுறை இந்தக் கோயில்களுக்கு வந்து தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்தத் திடீர் வருகையும், தாராளமான நன்கொடையும் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை! கேரள தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு!