ஜூன் மாதம் பிறக்கப்போகுது.. அமலுக்கு வரும் புதிய விதிகள் என்னென்ன..??
ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
புதிய மாதத்தின் தொடக்கத்தில் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். 2026 ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, எரிபொருள் விலை, ரயில்வே சேவை, வரி விதிகள் உள்ளிட்ட பல அம்சங்களில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இவற்றை முன்கூட்டியே தெரிந்துகொண்டு தேவையற்ற செலவுகளையும் சிரமங்களையும் தவிர்க்கலாம்.
UPI பரிவர்த்தனைகளில் பாதுகாப்பு உயர்வு: ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ள நிலையில், NPCI புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. QR கோடு ஸ்கேன் செய்தோ அல்லது மொபைல் எண் மூலமோ பணம் அனுப்பும்போது, பெறுநரின் வங்கிக் கணக்கில் பதிவாகியுள்ள முழு உறுதிப்படுத்தப்பட்ட பெயர் மட்டுமே திரையில் காட்டப்படும். இதற்கு முன்பு செல்லப் பெயர் அல்லது QR-ல் கொடுக்கப்பட்ட பெயர் காட்டப்பட்டது. இந்த மாற்றம் தவறான நபருக்கு பணம் செல்லும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கும். பயனர்கள் இனி பரிவர்த்தனை செய்யும் முன் பெயரை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
LPG சிலிண்டர் விலை திருத்தம்: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று எண்ணெய் நிறுவனங்கள் (IOC, BPCL, HPCL) LPG விலையை மறுபரிசீலனை செய்கின்றன. ஜூன் 1 அன்றும் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதங்களில் கமர்சியல் சிலிண்டர் (19 கிலோ) விலை கணிசமாக உயர்ந்து ரூ.3,000-ஐத் தாண்டியது. ஹோட்டல், உணவக உரிமையாளர்களுக்கு இது பெரும் சுமையாக அமைந்தது. 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றம் இல்லாததால் இல்லத்தரசிகள் ஓரளவு நிம்மதி அடைந்தனர். ஜூன் மாதத்திலும் விலை உயர்வு அல்லது குறைவு ஏற்படலாம். பயனர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை உற்று நோக்கவும்.
இதையும் படிங்க: "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!
ரயில்வே சேவையில் பாதிப்பு: ஜூன் மாதத்தில் இந்திய ரயில்வே தீவிர தண்டவாள பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதனால் சுமார் 77 ரயில்கள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. சில ரயில்களின் பாதை மாற்றப்படலாம் அல்லது சுருக்கப்படலாம். மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்படும். தமிழ்நாட்டிலிருந்து இந்த மாநிலங்களுக்கு பயணம் திட்டமிட்டவர்கள் IRCTC அல்லது NTES ஆப் மூலம் லைவ் ஸ்டேட்டஸை தொடர்ந்து சரிபார்க்க வேண்டும். பயணிகள் முன்கூட்டியே மாற்று ஏற்பாடுகள் செய்வது நல்லது.
PAN கார்டு விதிகளில் தளர்வு மற்றும் கட்டுப்பாடு: வருமான வரித்துறை PAN விதிகளை மாற்றியுள்ளது. ரூ.50,000-க்கு மேல் கேஷ் டெபாசிட் செய்யும்போது PAN கட்டாயம் இல்லை. சொத்து பரிவர்த்தனையில் முன்பு ரூ.10 லட்சம் வரை இருந்த வரம்பு இப்போது ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.45 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை செய்பவர்கள் கண்டிப்பாக PAN கொடுக்க வேண்டும். PAN இல்லாதவர்கள் இனி Form 97-ஐ பயன்படுத்தலாம் (முன்பு Form 60). இந்த மாற்றங்கள் வரி ஏய்ப்பைத் தடுக்க உதவும்.
சோலார் பேனல்கள் மானியத்துக்கு புதிய விதி: மின்சாரக் கட்டண உயர்வால் பலர் சோலார் பேனல்கள் அமைக்கின்றனர். ஜூன் 1 முதல் “Approved List of Models and Manufacturers” (ALMM) விதி அமலுக்கு வருகிறது. அரசு அங்கீகரித்த மாடல்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் பேனல்களுக்கு மட்டுமே மானியம் கிடைக்கும். தரம் குறைந்த பேனல்களுக்கு சலுகை இல்லை. இது தரமான தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும்.
ATM மற்றும் வங்கி சேவைகள்: சில வங்கிகள் டெபிட் கார்டு பரிவர்த்தனை வரம்புகளை மாற்றியுள்ளன. பஞ்சாப் நேஷனல் பேங்க் போன்றவை சில கார்டுகளுக்கு பணம் எடுக்கும் வரம்பை குறைத்துள்ளன. ஜூன் மாத RBI பணவியல் கொள்கை கூட்டத்தின் முடிவுகளின்படி வட்டி விகிதங்கள் (ரெப்போ ரேட்) மாறலாம். ரெப்போ விகிதம் குறைந்தால் வீட்டுக் கடன் EMI குறையும்; உயர்ந்தால் EMI அதிகரிக்கும். ATM கட்டணங்களிலும் மாற்றங்கள் வரக்கூடும்.
இந்த மாற்றங்கள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும். எனவே, அதிகாரப்பூர்வ ஆதாரங்களான NPCI, RBI, IRCTC, மற்றும் OMC இணையதளங்களை தொடர்ந்து கண்காணிப்பது நல்லது. முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் தேவையற்ற இழப்புகளைத் தவிர்க்கலாம்.
இதையும் படிங்க: VIP தரிசனத்துக்கு தனி நேரம் ஒதுக்க முடியாதா..? தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி..!!