×
 

பூதாகரமாகும் சபரிமலை தங்க திருட்டு வழக்கு..!! சுரேஷ் கோபியிடம் விசாரணை ஓவர்..!! நெக்ஸ்ட் மோகன்லால்..!!

சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு தொடர்பாக அடுத்த கட்டமாக மோகன் லாலிடம் விசாரணை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சபரிமலை ஆலயத்தில் 2017-இல் கோயில் கொடிமரத்தை புதுப்பிக்கும் பணியின்போது, பக்தர்களிடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட தங்கம் தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் சமீபத்தில் மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபியிடம் விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். அடுத்ததாக, நடிகர் மோகன்லாலிடமும் வாக்குமூலம் பெற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவின் திருவிதாங்கூர் தேவசம் போர்டு (TDB) நிர்வகிக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலில், 2017-ஆம் ஆண்டு கொடிமரத்தை மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்றன. இதற்காக பக்தர்களிடமிருந்து தங்கத் தகடுகள் மற்றும் பணம் நன்கொடையாக சேகரிக்கப்பட்டது. மொத்தம் 27 பேர் இதில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. இவர்களில் சுமார் 12 பேர் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு..!! நேரில் ஆஜரான ஜெயராம்..!! களத்தில் இறங்கிய ED..!!

இயக்குநர்கள் ஷாஜி கைலாஷ், ரஞ்சி பணிக்கர், தயாரிப்பாளர் சுரேஷ் குமார் போன்றோரின் வாக்குமூலங்கள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. நன்கொடையாக சேகரிக்கப்பட்ட மொத்த தங்க அளவு 9,573.010 கிராம் என அதிகாரப்பூர்வ ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கொடிமரத்தில் பயன்படுத்தப்பட்டது 9,340.2 கிராம் மட்டுமே என்று கூறப்படுகிறது. இந்த 232.81 கிராம் தங்கத்தின் முரண்பாடு மற்றும் கோயில் ஆவணங்களில் நன்கொடை விவரங்கள் தெளிவாக இல்லாதது ஆகியவை சந்தேகத்தை எழுப்பியுள்ளன. 

தேவசம் போர்டின் தலைமை விஜிலென்ஸ் அதிகாரி இதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, கேரள உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு (VACB) இப்போது நன்கொடை அளித்த 27 பேரிடமும் வாக்குமூலம் பெறும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதுவரை 20 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

சுரேஷ் கோபியின் வாக்குமூலம் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் எடுக்கப்பட்டது. இது முழுமையான விசாரணை அல்ல என்றும், அவர் நன்கொடை அளித்தவர்களில் ஒருவர் மட்டுமே என்பதால் விவரங்கள் சேகரிக்கப்பட்டதாகவே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோகன்லால் உள்ளிட்ட மீதமுள்ளோரின் வாக்குமூலங்களும் விரைவில் பெறப்பட உள்ளன. அனைத்து வாக்குமூலங்களும் சேகரிக்கப்பட்ட பிறகு, நன்கொடையாகக் கிடைத்த தங்கத்தின் அளவு, கொடிமரத்தில் பயன்படுத்தப்பட்ட அளவு ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்து முறைகேடு உறுதியாகிறதா என்பதை அதிகாரிகள் சரிபார்ப்பார்கள். 

மோசடி நிரூபணமானால் மட்டுமே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போது இது ஆரம்பகட்ட விசாரணையாகவே உள்ளது. கோயில் நிர்வாக ஆவணங்களில் நன்கொடை விவரங்கள் இல்லாததால், நேரடி விசாரணை மூலமே உண்மைகளைத் திரட்ட அதிகாரிகள் முயல்கின்றனர். இந்த வழக்கு சபரிமலை ஆலயத்தின் புனிதத்தன்மைக்கு சவாலாக அமைந்துள்ளதால், பக்தர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை முடிவுகள் விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு..!! நேரில் ஆஜரான ஜெயராம்..!! களத்தில் இறங்கிய ED..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share