பாகிஸ்தானுக்கு பெரும் நிம்மதி! ரூ.28,000 கோடி கடனுக்கு ஒப்புதல்! சவுதி அரேபியா முடித்து வைத்த டீல்!
பாகிஸ்தானுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் விதமாக, சவுதி அரேபியா கூடுதலாக 28,000 கோடி ரூபாய் கடனுதவி அளிப்பதாக உறுதி அளித்துள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அண்டை நாடான பாகிஸ்தானுக்கு, சவுதி அரேபியா மீண்டும் உதவிக்கரம் நீட்டியுள்ளது. ஏற்கனவே உள்ள 5 பில்லியன் டாலர் வைப்பு நிதியை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டித்து, கூடுதலாக 3 பில்லியன் டாலர் (சுமார் 25,000 கோடி ரூபாய்) புதிய நிதி உதவி அளிப்பதாக சவுதி அரேபியா உறுதி அளித்துள்ளது.
பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது அவுரங்கசேப், வாஷிங்டனில் உலக வங்கி-ஐ.எம்.எப். கூட்டங்களின் போது செய்தியாளர்களிடம் இந்த மகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்தார். இந்தப் புதிய 3 பில்லியன் டாலர் உதவி அடுத்த வாரத்துக்குள் வழங்கப்படும் என்றும், ஏற்கனவே உள்ள 5 பில்லியன் டாலர் வைப்பு நிதியை ஆண்டுதோறும் புதுப்பிக்கும் முறையை நீக்கி, நீண்ட காலத்துக்கு (மூன்று ஆண்டுகள்) நீட்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் மொத்தம் 8 பில்லியன் டாலர் அளவுக்கு சவுதி உதவி பாகிஸ்தானுக்கு கிடைக்கும்.
பாகிஸ்தான் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு 3.5 பில்லியன் டாலர் கடன் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது. வெளிநாட்டு நாணயக் கையிருப்பை வலுப்படுத்தவும், பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும் இந்த சவுதி உதவி மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் 1.4 பில்லியன் டாலர் யூரோபாண்ட் கடனை வெற்றிகரமாகத் திருப்பிச் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.200 உயர்வு!! டீசல் ரூ.336-க்கு விற்பனை! மக்கள் தலையில் இடியை இறக்கிய பாக்.,!
இந்த நிதி உதவிக்குப் பின்னணியில் இரு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கமான உறவு உள்ளது. கடந்த செப்டம்பர் 2025இல் சவுதி அரேபியாவில் கையெழுத்தான இராணுவ ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் தனது போர் விமானங்கள் மற்றும் ராணுவ வீரர்களை சவுதி அரேபியாவுக்கு அனுப்பி பாதுகாப்பு உதவி செய்து வருகிறது.
இதற்கு பதிலாக சவுதி அரேபியா பொருளாதார உதவியை வழங்கி வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் ஒரு நாட்டுக்கு எதிரான தாக்குதலை மற்றொன்றுக்கு எதிரான தாக்குதலாகக் கருதும் வகையில் உறவை வலுப்படுத்தியுள்ளன.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் தலைமையிலான அரசு, சர்வதேச நாணய நிதியம் (IMF) உள்ளிட்ட அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், சவுதியின் இந்த உதவி பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இந்த உதவி பாகிஸ்தானின் வெளிநாட்டுக் கடன் அழுத்தத்தை ஓரளவு குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், பாகிஸ்தான் தொடர்ந்து சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளிடமும் கடன் உதவி கோரி வருகிறது. சவுதி அரேபியாவின் இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால நட்புறவையும் இராஜதந்திர உறவையும் மேலும் வலுப்படுத்தும் என்று கருதப்படுகிறது.
இதையும் படிங்க: ஈரான் சென்ற பாக்., அமைச்சர்! 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தூது!! மேற்காசிய போரை முடித்துவைக்க திட்டம்?!