தமிழ்நாட்டில் பசுக்கள், கன்றுகளை வெட்ட தடை... உச்சநீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு..!
தமிழ்நாட்டில் பசுக்கள் மற்றும் கன்றுகளை வெட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்திருந்த தடைக்கு, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கடந்த மே மாதம், இறைச்சிக் கூடங்கள் உள்ளிட்ட எந்த இடங்களிலும் பசுக்கள் மற்றும் கன்றுகளை வெட்டக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டோ அல்லது வேறு எந்த நாட்களிலோ தமிழ்நாட்டில் பசுக்கள் அல்லது கன்றுக்குட்டிகளை வதைக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மே 27-ஆம் தேதி முக்கிய உத்தரவு பிறப்பித்திருந்தது.
மேலும், கால்நடை பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை தமிழ்நாடு அரசு மிகக் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இதையும் படிங்க: "எங்களுக்கே உத்தரவா?" மனுதாரரின் செயலால் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு..!!
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி கே. சூரியபிரகாஷ் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வில் இருந்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
அந்த மேல்முறையீட்டு மனுவில், தமிழ்நாடு பசுவதைத் தடுப்புச் சட்டம் மற்றும் கால்நடைகள் பராமரிப்பு தொடர்பான நடைமுறைகளின் அடிப்படையில் அரசு ஏற்கனவே உரிய விதிமுறைகளை பின்பற்றி வருகிறது என்றும், இந்த விவகாரத்தில் நீதிமன்றங்கள் தங்களது அதிகார வரம்பிற்குள் செயல்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு வாதிட்டிருந்தது.
இந்த வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாட்டில் பசுக்கள் மற்றும் கன்றுகளை வெட்டுவதற்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
மேலும், இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏதேனும் விதிமீறல்கள் அல்லது பிரச்சினைகள் ஏற்பட்டால், அதுகுறித்து பின்னர் பரிசீலிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சுப்ரீம் கோர்ட்டிலேயே பல்பு..! உச்சந்தலையில் ஓங்கி கொட்டு..! திமுகவை கலாய்த்த தவெக..!