காஷ்மிரை கூறுபோட பயங்கர சதித்திட்டம்!! காட்டுக்குள் மறைத்து வைத்திருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு!
ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்காக தயார் செய்யப்பட்டு, பதுக்கி வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை பாதுகாப்பு படையினர் கண்டறிந்து அழித்தனர்.
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த சதியை பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். ரஜோரி மாவட்டத்தில் உள்ள தனமண்டி பகுதியின் கல்லார் வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை படையினர் கண்டறிந்து அழித்துள்ளனர்.
ரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், கல்லார் வனப்பகுதியில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கும் ராணுவத்துக்கும் தெரியவந்தது. உடனடியாக அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில், வனப்பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட சக்தி வாய்ந்த வெடிபொருள் ஒன்றை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.
இந்த வெடிகுண்டு ஜம்மு காஷ்மீர் பகுதியில் பெரிய தாக்குதல் நடத்துவதற்காக தயார் செய்யப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் அழைக்கப்பட்டு, பாதுகாப்பான முறையில் வெடிபொருள் செயலிழக்கச் செய்யப்பட்டது. பின்னர் கட்டுப்பாட்டு வெடிவிபத்தில் அது முழுமையாக அழிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு!! என்ஐஏ விசாரணையில் வெளியான தகவல்கள்! குற்றப்பத்திரிகை தாக்கல்!
இந்த வெற்றிகரமான நடவடிக்கை காரணமாக பயங்கரவாதிகளின் ஒரு பெரிய சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜோரி மாவட்டம் போன்ற எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகள் தொடர்ந்து ஊடுருவ முயல்வதால், பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக ஜம்மு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய ரகசிய தகவல்களும் தீவிர தேடுதல் நடவடிக்கைகளும் பெரிதும் உதவியாக உள்ளன. பாதுகாப்புப் படையினரின் விழிப்புணர்வு காரணமாக பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: பாக்., வயிற்றில் புளியை கரைக்கும் இந்தியா! லட்சம் வீரர்களுடன் களமிறங்கும் பைரவ் படை!