×
 
☰

ஷார்ஜாவில் பயங்கரம்! 9 துண்டுகளாக வெட்டி கொல்லப்பட்ட இந்தியர்! மனைவி, மகன் மாயம்?

ஆல்வினின் மனைவி டினா மற்றும் அவர்களது மகன் தற்போது எங்கு உள்ளனர் என்பது உறுதி செய்யப்படவில்லை. அவர்கள் இந்தியாவுக்கு சென்றிருக்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் கர்நாடகாவைச் சேர்ந்த நபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் ஒன்பது துண்டுகளாக வெட்டப்பட்டு இரண்டு பைகளில் அடைக்கப்பட்ட நிலையில் காரில் கண்டெடுக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஷார்ஜா போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் பதின்ம வயது மகனின் இருப்பிடம் குறித்தும் மர்மம் நீடிக்கிறது.

உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர், சுமார் 14 ஆண்டுகளாக ஷார்ஜா விமான நிலையத்தில் பணியாற்றி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மனைவி டினா குந்தர் ஷார்ஜாவில் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வந்ததாகவும், அவர்களது மகன் 10-ம் வகுப்பு படித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஜூலை 20-ம் தேதி ஆல்வினை அவரது சகோதரர் அனில் பிரசாந்த் தொடர்பு கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அழைப்பை ஏற்காத ஆல்வினின் செல்போனில் இருந்து, தான் நலமாக இருப்பதாகவும் ஓய்வெடுத்து வருவதாகவும் குறுஞ்செய்தி வந்துள்ளது. வழக்கமாக குரல் செய்தி மூலமே தொடர்பு கொள்வார் என்பதால், இந்த மெசேஜ் குடும்பத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் பிரிட்ஜ் வெடித்து கோர விபத்து! தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் பரிதாப பலி! குடும்பமே சிதைந்த சோகம்!

தொடர்ந்து ஆல்வினை தொடர்பு கொள்ள முடியாததால், ஷார்ஜாவில் இருந்த அவரது நண்பர் மூலம் விசாரிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அவர் இந்தியா சென்றிருக்கலாம் என தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் பாஸ்போர்ட் தொடர்பான தகவல்களை சரிபார்த்தபோது, அவர் ஷார்ஜாவிலேயே இருந்தது தெரியவந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது.

தேடுதல் நடவடிக்கைகளின் போது, ஓமன் செல்லும் வழித்தடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஆல்வினின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். உடல் ஒன்பது துண்டுகளாக வெட்டப்பட்டு இரண்டு பைகளில் வைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அது ஆல்வினுடையது என அடையாளம் காணப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே ஆல்வினின் மனைவி டினா மற்றும் அவர்களது மகன் தற்போது எங்கு உள்ளனர் என்பது உறுதி செய்யப்படவில்லை. அவர்கள் இந்தியாவுக்கு சென்றிருக்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதற்கு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை. மேலும், கொலை சம்பவத்தில் மனைவிக்கு தொடர்பு இருப்பதாக வெளியாகும் சந்தேகங்களுக்கும் இதுவரை உறுதியான ஆதாரம் அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

ஆல்வின் கொலைக்கான காரணம் என்ன, சம்பவத்தில் யார் ஈடுபட்டுள்ளனர், அவரது மனைவி மற்றும் மகன் தற்போது எங்கு உள்ளனர் என்பது குறித்து ஷார்ஜா அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, ஆல்வினின் சகோதரர் அனில் பிரசாந்த் உடுப்பி மாவட்ட போலீஸ் அதிகாரிகளை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார். வழக்கின் முழு பின்னணி விசாரணை முடிந்த பின்னரே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்கள் கண்முன்னே ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்! முன்னாள் காதலன் வெறிச்செயல்! விபரீத முடிவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share