சொல்ல முடியாத துயரம்!! சிறுபான்மையினர் எரித்துக்கொல்லப்படும் அட்டூழியம்!! ஷேக் ஹசீனா ஆவேசம்!
''வங்கதேசத்தில் இடைக்கால அரசு மத சுதந்திரத்தில் தலையிடுவதால் சிறுபான்மையினர் உயிருடன் எரித்துக் கொல்லப்படுகின்றனர்,'' என அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.
டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினர், குறிப்பாக இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இடைக்கால அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வீடியோ செய்தியில், இடைக்கால அரசு மத சுதந்திரத்தில் தலையிட்டு, சிறுபான்மையினருக்கு "சொல்லொணா துயரங்கள்" ஏற்படுத்துவதாகவும், உயிருடன் எரிப்பது போன்ற அட்டூழியங்களுக்கு வழிவகுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
வங்கதேசத்தின் நிறுவனர் ஒரு மதசார்பற்ற நாட்டைக் கனவு கண்டார் என்று கூறிய ஷேக் ஹசீனா, அவாமி லீக் ஆட்சியில் அனைத்து மதத்தினரும் அமைதியாக வாழ்ந்தனர் என்றார். ஆனால் தற்போதைய இடைக்கால அரசு சட்டவிரோதமாக அதிகாரத்தைக் கைப்பற்றி, அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்களின் மத சுதந்திரத்தில் தலையிடுவதாகவும், குறிப்பாக இஸ்லாம் அல்லாதவர்கள் மீது கொடூரமான அடக்குமுறைகளை ஏவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: இந்து இளைஞர் கொலை! வருத்தம் தெரிவிச்சா போதுமா? ஆக்சன் வேணும்! வங்கதேச அரசுக்கு சசி தரூர் அறிவுறுத்தல்!
சமீபத்தில் மைமென்சிங் பகுதியில் தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் கும்பலால் அடித்துக்கொல்லப்பட்டு உடல் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தையும், அதைத் தொடர்ந்து இந்து வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டிய ஷேக் ஹசீனா, இத்தகைய கொடூரங்கள் தொடர்வதாக வருத்தம் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் ராஜ்பாரி மாவட்டத்தில் மற்றொரு இந்து இளைஞர் கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவமும் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச மக்கள் இந்த இருண்ட காலத்தை தொடர அனுமதிக்க மாட்டார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த ஷேக் ஹசீனா, கிறிஸ்துமஸ் பண்டிகை அனைத்து மதங்களுக்கும் இடையே அமைதியையும் நல்லிணக்கத்தையும் மேலும் வலுப்படுத்தும் என்று கூறினார். சிறுபான்மையினர் சொல்லொணா துயரத்தில் உள்ளனர் என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், அவரது இந்த வீடியோ செய்தி வங்கதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்த கவலைகள் தொடரும் நிலையில், இடைக்கால அரசு இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.
இதையும் படிங்க: வங்கதேசத்தில் தலைவிரித்தாடும் வன்முறை!! முகமது யூனுஸை வறுத்தெடுக்கும் ஷேக் ஹசீனா!!