அச்சுறுத்தும் ஷிகெல்லா தொற்று! அதிகரிக்கும் வேகம்! கேரளாவில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!
இதனால், கேரளாவில் ஷிகெல்லா தொற்றுக்கு மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது.
கேரளாவில் ஷிகெல்லா எனப்படும் ஆபத்தான பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வருவது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகளும் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.
மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர் ஷிகெல்லா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். இதன்மூலம் கேரளாவில் இந்த தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக உயிரிழப்புகள் பதிவாகி வருவது சுகாதாரத்துறையினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
சமீபத்தில் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் அர்ஜாவ் காய்ச்சல் மற்றும் கடுமையான வயிற்றுப்போக்கு காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு ஷிகெல்லா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிறுவன் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இருந்து கேரளா விலகாது!! கேரள முதல்வர் சதீசன் வெளிப்படை!
சுகாதாரத்துறை அமைச்சர் முரளீதரன் தெரிவித்த தகவலின்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை மாநிலத்தில் 146 பேருக்கு ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் மட்டும் ஜூன் மாதத்தில் 70 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பில் பாதிக்கும் மேற்பட்டவை ஒரே மாதத்தில் பதிவாகியிருப்பது, நோய் பரவலின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.
ஷிகெல்லா தொற்று பொதுவாக காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் உடல் சோர்வு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. சுத்தமற்ற குடிநீர், கெட்டுப்போன உணவு மற்றும் தொற்று பாதித்தவர்களுடன் நேரடி தொடர்பு மூலமாக இந்த நோய் பரவக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் கண்காணிப்பு, பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மக்கள் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கேரளாவில் பெண்களுக்கு ஃப்ரீ பஸ்..!! இன்று முதல் அமலுக்கு வந்தாச்சு..!!