கடற்படை குறித்து பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பிய உளவாளி!! இந்தியாவுக்கு எதிராக பின்னப்பட்ட சதிவலை!
நம் நாட்டின் கடற்படைக்காக தயாரிக்கப்படும் கப்பல்களின் திறன், போர் கப்பல்களின் திறன் குறித்த ரகசிய தகவல்கள், இங்கிருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவதாக தகவல் கிடைத்தது.
உடுப்பி: கர்நாடகாவின் உடுப்பி மாவட்டம் மல்பேயில் உள்ள கொச்சின் ஷிப்யார்டு யூனிட்டில் இந்திய கடற்படைக்கான கப்பல்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் மூலம் கப்பல்களின் ரகசிய தகவல்கள் பாகிஸ்தானுக்கு கசியவிடப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, உடுப்பி போலீசார் தீவிர விசாரணை நடத்தி மூன்று நபர்களை கைது செய்துள்ளனர்.
கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்தின் மல்பே தளத்தில் துணை ஒப்பந்தக்காரரான சுஷ்மா மரைன் நிறுவனத்தில் பணியாற்றிய உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரோகித் (29) மற்றும் சாந்திரி (37) ஆகியோரை கடந்த நவம்பர் மாதம் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் வாட்ஸ்அப் மூலம் இந்திய கடற்படை கப்பல்களின் எண்கள், அடையாளங்கள் உள்ளிட்ட ரகசிய தகவல்களை பாகிஸ்தானில் உள்ள நபர்களுக்கு பணத்துக்காக அனுப்பியது தெரியவந்தது. இந்தச் செயல் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதையும் படிங்க: இலங்கை சிறையில் வாடும் மீனவர்கள்... கூட்டுப் பணிக் குழுவை ஏற்படுத்துங்க... முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்...!
இந்த வழக்கில் தொடர்புடைய மூன்றாவது நபராக குஜராத் மாநிலம் ஆனந்த் தாலுகாவைச் சேர்ந்த ஹிரேந்திர குமார் (34) கைது செய்யப்பட்டார். டிசம்பர் 20-ஆம் தேதி கைது செய்யப்பட்ட இவர், ரோகித் மற்றும் சாந்திரிக்கு தனது பெயரில் சிம் கார்டு வாங்கிக் கொடுத்து உதவியுள்ளார்.
அதோடு, வாட்ஸ்அப் செயல்படுத்த ஓடிபி கூட பகிர்ந்து கொடுத்துள்ளார். இதன்மூலம் ரகசிய தகவல்கள் பாகிஸ்தானுக்கு செல்ல உதவியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உடுப்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டண்ட் ஹரிராம் சங்கர் கூறுகையில், “ஹிரேந்திர குமார் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். ஏற்கனவே கைது செய்யப்பட்ட இருவருக்கும் ஆலோசகராகவும் உதவியாளராகவும் இருந்துள்ளார். இந்த வழக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பானது என்பதால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரும் பாரதிய நியாய சன்ஹிதை மற்றும் அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான இடங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பின்புலத்தை சரிபார்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: வங்கதேசத்தில் நிலவும் தொடர் வன்முறை! குறிவைக்கப்படும் இந்துக்கள்! வங்கதேச வன்முறை குறித்து ஐநா கவலை!!