அடிக்க பாய்ந்த முதல்வர்.. அதிகாரி எடுத்த ஆக்ஷன்.. சிக்கிய சித்தராமையாவை பொளந்துகட்டும் பாஜக..!
போலீஸ் சீருடை அணிந்திருந்த காவல்துறை உயர் அதிகாரி என்றும் பாராமல், சித்தராமையா அவரை நோக்கி கை ஓங்கினார். அவரை அடிக்க முற்பட்டு, அதன் பிறகு பின் வாங்கினார்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. பெட்ரோல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து, காங்கிரசார் மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் பெலகாவியில் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. இதில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், கட்சி மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அமைச்சர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் சித்தராமையா பேச எழுந்த போது, கூட்டத்திற்குள் புகுந்த பாஜக மகளிர் அணியினர், சித்தராமையா மற்றும் காங்கிரஸ் அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
கூட்டத்தில் இருந்த சிலர் பாஜகவுக்கு ஆதரவாகவும், முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். மேலும் சிலர் சித்தராமையாவுக்கு எதிராக கருப்பு கொடி காட்டினர். இதை சற்றும் எதிர்பாராத முதல்வர், பேச்சை நிறுத்தினார்.
இதையும் படிங்க: கேரளா, கர்நாடகாவை புரட்டிப்போட்ட கனமழை.. ஆட்டம் காட்டும் தென்மேற்கு பருவமழை..
கடுப்பான சித்தராமையா, என்ன போலீஸ் பந்தோபஸ்து இது. யார் இங்கே எஸ்பி என கேள்வி எழுப்பினார். உடனே அங்கு பாதுகாப்பு பணிகளுக்கு தலைமை ஏற்றிருந்த தார்வாடு கூடுதல் எஸ்பி நாராயண் வி பாராமணி மேடைக்கு வந்தார். போலீஸ் சீருடை அணிந்திருந்த காவல்துறை உயர் அதிகாரி என்றும் பாராமல், சித்தராமையா அவரை நோக்கி கை ஓங்கினார். அவரை அடிக்க முற்பட்டு, அதன் பிறகு பின் வாங்கினார்.
பொது வெளியில் நுாற்றுக் கணக்கானோர் கூடியிருந்த இடத்தில் போலீஸ் உயர் அதிகாரியை, முதல்வர் சித்தராமையா அடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கர்நாடக காவல் துறையில் 31 ஆண்டுகள் பணியாற்றிய பாராமணி, தன் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து கடந்த மாதமே உயர் அதிகாரிகளுக்கு தன் கடிதம் அனுப்பி விட்டதாகவும், தலைமையகத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சித்தராமையாவின் அராஜக செயல், நேர்மையான போலீஸ் அதிகாரியை விருப்ப ஓய்வு பெறும் நிலைக்கு தள்ளிவிட்டது என பாஜக தலைவர்கள் விமர்சித்துள்ளனர். இந்த சம்பவம் நடந்த போதே, அந்த வீடியோவை வெளியிட்டு, ஹிட்லரும், அவுரங்கசீப்பும் உயிருடன் இல்லை என யார் சொன்னது? என கர்நாடக பாஜ தலைவர்கள் கருத்து பதிவிட்டிருந்தனர். தற்போது அந்த அதிகாரி விருப்ப ஓய்வு பெற முடிவெடுத்துள்ளது, காங்கிரஸ் தலைமையிலான கொடுங்கோல் ஆட்சிக்கு எடுத்துக்காட்டு எனவும் பாஜ விமர்சித்துள்ளது.
இதையும் படிங்க: எமர்ஜென்சிங்கிற பேருல என்னலாம் நடந்துச்சு தெரியுமா? மனதின் குரல் நிகழ்ச்சியில் நார் நாராக கிழித்த மோடி..!