உலக அளவில் மாஸ் காட்ட தயாராகும் இந்தியா! பிரிட்டன் பிரதமர் கணிப்பு! அடிச்சிக்க ஆளே இல்ல!
2028ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கப் போகிறது என பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற பின் முதல் முறையாக இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார் கெய்ர் ஸ்டார்மர். மஹாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் இருந்து அவரது பயணம் தொடங்கியுள்ளது. அவருடன் பிரிட்டனைச் சேர்ந்த 125 தொழிலதிபர்கள், தொழில்முனைவோர், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் கலாச்சாரத் தலைவர்கள் உள்ளிட்ட பெரும் குழு இணைந்துள்ளது.
இந்தப் பயணம், "பிரிட்டன் வரலாற்றிலேயே இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட மிகப்பெரிய வர்த்தகப் பணியக் குழு" என்று ஸ்டார்மர் விவரித்துள்ளார். இன்று (அக்டோபர் 9) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்தச் சந்திப்பில், வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, கல்வி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புகளை மேம்படுத்தும் 'விஷன் 2030' திட்டம் முக்கிய இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியா வந்தார் பிரிட்டன் பிரதமர்! மோடி போட்டு வைத்திருக்கும் மாஸ்டர் ப்ளான்!
மும்பையில் நேற்று (அக்டோபர் 8) நடந்த வர்த்தகத் தலைவர்கள் சந்திப்பில் பேசிய ஸ்டார்மர், "இந்தியா-பிரிட்டன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எஃப்.டி.ஏ.) எண்ணற்ற வாய்ப்புகளை வழங்கும். இது காகிதத்தில் மட்டுமல்ல, இரு நாடுகளின் வளர்ச்சிக்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த ஜூலை 23-24 தேதிகளில் இந்தியப் பிரதமர் மோடி லண்டனில் நடத்திய பயணத்தின் போது, மூன்று ஆண்டுகள் நீடித்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இது, பிரிட்டன் ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேறிய பின் (பிரெக்சிட்) அந்நாட்டின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாகவும், இந்தியாவின் மிக முக்கியமான ஒப்பந்தமாகவும் கருதப்படுகிறது. "இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் ஊழியர்களின் ஊதியங்களை உயர்த்தும், வாழ்க்கைச் செலவுகளைக் குறைக்கும்" என்று ஸ்டார்மர் சேர்த்து கூறினார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், 2030க்குள் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் இரட்டிப்பாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தை அணுகல் மேம்படும், ஏற்றுமதி-இறக்குமதி பொருட்களுக்கான சுங்கவரிகள் குறையும். குறிப்பாக, பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாக வரும் குளிர்பானங்கள், அழகு சாதனப் பொருட்கள், கார்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலைகள் கணிசமாகக் குறையும்.
பிரிட்டன் விஸ்கி மதுவினங்களுக்கு இந்தியாவில் 150 சதவீதமாக இருந்த வரி 75 சதவீதமாக பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது, ஸ்காட்ச் விஸ்கி தொழிலுக்கு ஆண்டுக்கு 190 மில்லியன் பவுண்டுகள் (சுமார் 2,000 கோடி ரூபாய்) லாபத்தைத் தரும் என பிரிட்டன் அரசு கணிக்கிறது. இதன் மூலம், இந்தியாவின் நுகர்வோர் மலிவு விலையில் உயர்தர பொருட்களைப் பெறலாம்.
ஸ்டார்மர், "2028க்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும். இதனால், இந்தியாவுடனான வர்த்தகம் வேகமெடுக்கும். இரு நாடுகளுக்கும் இது பெரும் வாய்ப்புகளை அளிக்கும்" என்றும் கூறினார். இந்தியாவின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 7 சதவீதத்தைத் தாண்டி, 2028க்குள் அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என உலக வங்கி மற்றும் ஐ.எம்.எஃப் அறிக்கைகள் கணிக்கின்றன.
இந்தப் பயணத்தில், ஸ்டார்மர் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் (வை.ஆர்.எஃப்.) ஸ்டூடியோவைச் சந்தித்து, இந்திய-பிரிட்டன் சினிமா ஒத்துழைப்பை வலுப்படுத்தினார். மேலும், மும்பையில் நடக்கும் 6ஆம் உலக ஃபின் டெக் பண்டிகையில் மோடியுடன் இணைந்து முக்கிய உரையாற்றவுள்ளார்.
இந்தப் பயணம், இந்திய-பிரிட்டன் உறவுகளின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என விளிம்பரப்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டன் அமைச்சர் அலன் பேடன், "இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானது" என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், விசா ஒப்பந்தம் குறித்து ஸ்டார்மர், "இந்தப் பயணத்தில் விசா விவகாரங்கள் இடம்பெறாது; வர்த்தகம் மற்றும் முதலீட்டில் மட்டும் கவனம் செலுத்துவோம்" என்று தெளிவுபடுத்தினார். இந்த ஒப்பந்தம், இந்தியாவின் ஏற்றுமதி துறைகளான ஐ.டி., ஃபார்மா மற்றும் ஆட்டோமொபைல் துறைகளுக்கு புதிய சந்தைகளைத் திறக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த இந்த நேர்மறை செய்திகள், அரசியல் களத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இதையும் படிங்க: இது இனரீதியான மிரட்டல்!! இத பொறுத்துக்க மாட்டோம்!! பிரிட்டன் பிரதமர் வார்னிங்!